• Sep 11 2026

காலமானார் தமிழை உலகறியச் செய்த சாலமன் பாப்பையா.. சோகத்தில் ரசிகர்கள்.!

shali / 1 hour ago

Advertisement

Listen News!

பட்டிமன்றத்தை உலகம் முழுவதும் கொண்டு சென்ற பெருமைக்குரிய பேராசிரியர் சாலமன் பாப்பையா, வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். அவருக்கு வயது 90. அவரது மறைவு தமிழ் இலக்கிய உலகிலும், பட்டிமன்ற ரசிகர்கள் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி, தமிழின் சிறப்பையும், இலக்கியத்தின் ஆழத்தையும் மக்களிடம் கொண்டு சேர்த்தவர் சாலமன் பாப்பையா. அறிஞர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்களுக்குள் மட்டுமே இருந்த பட்டிமன்றத்தை பாமர மக்களிடமும் பிரபலப்படுத்தியதில் இவரது பங்கு மிகப்பெரியது.


பாரதியாரின் கவிதைகள் முதல் கம்பனின் காவியம் வரை பழந்தமிழ் இலக்கியங்களை எளிமையான, நகைச்சுவையான மற்றும் அறிவார்ந்த பேச்சின் மூலம் மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். திருக்குறள் உள்ளிட்ட பல்வேறு பழந்தமிழ் இலக்கியங்களுக்கு உரையும் எழுதியுள்ளார்.

தமிழ் மொழிக்கும், இலக்கியத்துக்கும் ஆற்றிய பணிக்காக 2000-ம் ஆண்டு தமிழக அரசின் கலைமாமணி விருதைப் பெற்றார். மேலும், பட்டிமன்றத் துறைக்காக முதன்முறையாக பத்மஸ்ரீ விருது பெற்ற பெருமையும் இவருக்கு உண்டு. மத்திய அரசின் நான்காவது உயரிய விருதான பத்மஸ்ரீ விருது அவருக்கு 2021-ம் ஆண்டு வழங்கப்பட்டது.

பட்டிமன்ற நடுவராக மட்டுமல்லாமல், திரைப்படங்களிலும் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். சிவாஜி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். பலரும் திரைத்துறையை நோக்கிச் சென்ற நிலையில், திரைத்துறையினரையே பட்டிமன்ற மேடைக்கு அழைத்து வந்தவர் என்ற பெருமையும் சாலமன் பாப்பையாவுக்கு உண்டு.

எளிமையான பேச்சு, நகைச்சுவை மற்றும் ஆழமான தமிழ் அறிவால் பல தலைமுறை ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த சாலமன் பாப்பையாவின் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். மதுரையில் அவரது உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Advertisement

Advertisement