நடிகர் சூரி நடிப்பில் வெளியாகியுள்ள மண்டாடி திரைப்படத்திற்கு இலங்கையில் உள்ள ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது.
இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கியுள்ள இப்படம், ராமநாதபுரம் கடலோடிகளின் பாரம்பரியமான பாய்மரப்படகுப் போட்டியை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் நல்ல வரவேற்பை பெற்று வரும் இப்படம், தற்போது மூன்றாவது வாரத்தைக் கடந்து ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இதுவரை ரூ.125 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படும் மண்டாடி, விரைவில் ரூ.150 கோடி வசூல் மைல்கல்லை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இலங்கைக்கு சென்றுள்ள நடிகர் சூரி, அங்கு ரசிகர்களுடன் இணைந்து திரையரங்கில் மண்டாடி திரைப்படத்தை பார்த்தார். சூரியின் வருகையை அறிந்த இலங்கை வாழ் தமிழர்கள் திரையரங்கிற்கு வெளியே திரண்டு அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். ரசிகர்களின் அன்பைக் கண்டு மகிழ்ந்த சூரி, அவர்களுடன் புகைப்படங்களும் எடுத்துக்கொண்டார்.
தொடர்ந்து ரசிகர்களிடம் பேசிய சூரி, “இலங்கையில் மண்டாடிக்கு கிடைக்கும் அன்பு இந்தளவுக்கு இருக்கும் என்று எதிர்பார்க்கவே இல்லை. இது முரட்டுத்தனமான அன்பாக இருக்கிறது” என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
மேலும், டிக்கெட் கிடைக்காமல் ரசிகர்கள் வரிசையில் நிற்பதை காட்டும் வீடியோக்களை பார்த்ததாகவும், இலங்கை மக்களின் இந்த அன்பு தன்னை மிகவும் மகிழ்ச்சியடையச் செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
Listen News!