2022-ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற 'கட்டா குஸ்தி' திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, தற்போது அதன் இரண்டாம் பாகம் வெளியாகியுள்ளது.
முதல் பாகத்தில் கணவன் - மனைவி இடையேயான ஈகோ மோதல்களை நகைச்சுவையுடன் பேசிய இயக்குநர் செல்லா அய்யாவு, இந்த முறை திருமண வாழ்க்கையின் அடுத்த கட்டமான குடும்ப பொறுப்புகள், புரிதல், குழந்தையின் உணர்வுகள் மற்றும் நம்பிக்கை ஆகியவற்றை மையமாக வைத்து கதையை நகர்த்தியுள்ளார்.
முதல் பாகத்தின் முடிவில் இணைந்த விஷ்ணு விஷால் - ஐஸ்வர்யா லட்சுமி ஜோடி, இந்தப் படத்தில் புதிய வாழ்க்கையை தொடங்கியுள்ளனர். தேசிய அளவிலான குஸ்தி வீராங்கனையாக ஐஸ்வர்யா லட்சுமி தனது விளையாட்டு வாழ்க்கையில் கவனம் செலுத்த, வீட்டையும் குழந்தையையும் முழுமையாக கவனிக்கும் ஹவுஸ் ஹஸ்பென்டாக விஷ்ணு விஷால் மாறியிருக்கிறார்.
சந்தோஷமாக சென்று கொண்டிருக்கும் அவர்களது வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பம் ஏற்படுகிறது. போட்டிக்கான பயிற்சியில் இருக்கும் ஐஸ்வர்யா லட்சுமியின் உணவில் தெரியாமலேயே போதைப் பொருள் கலக்கப்படுகிறது. இதனால் போட்டியில் தோல்வியடைந்த அவர், ஒரு வருட தடை தண்டனையையும் சந்திக்கிறார்.

இதற்கு பின்னால் தனது கணவர்தான் காரணம் என தவறாக நம்பும் அவர், குடும்பத்தை விட்டு பிரிந்து விவாகரத்தும் கேட்கிறார். அதன் பிறகு என்ன நடக்கிறது? அந்த குடும்பம் மீண்டும் இணைகிறதா? என்பதுதான் படத்தின் மீதமுள்ள கதை.
படத்தின் மிகப்பெரிய பலம் அதன் திரைக்கதையில்தான் உள்ளது. வெறும் நகைச்சுவைக்காக மட்டுமல்லாமல், குடும்ப உறவுகள், கணவன் - மனைவி இடையேயான நம்பிக்கை, குழந்தையின் மனநிலை, விட்டுக்கொடுத்தல் போன்ற விஷயங்களை கமர்ஷியல் பாணியில் சொல்ல முயற்சித்திருப்பது பாராட்டுக்குரியது.
ஹவுஸ் ஹஸ்பென்ட் கதாபாத்திரத்தில் விஷ்ணு விஷால் மிகவும் இயல்பாக நடித்திருக்கிறார். குறிப்பாக மகளுடன் வரும் காட்சிகள் உணர்வுபூர்வமாக அமைந்துள்ளன. காமெடியிலும், சென்டிமென்ட்டிலும் சமநிலையை காப்பாற்றி தனது கதாபாத்திரத்தை அழகாக தாங்கியுள்ளார்.
ஐஸ்வர்யா லட்சுமிக்கும் இந்தப் படம் நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது. குஸ்தி வீராங்கனையாக ஆக்ஷன் காட்சிகளிலும், உணர்ச்சிப்பூர்வமான காட்சிகளிலும் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.
விஷ்ணு விஷால் - ஐஸ்வர்யா லட்சுமி ஜோடியின் கெமிஸ்ட்ரி முதல் பாகத்தைப் போலவே இந்தப் படத்திலும் நன்றாக வேலை செய்துள்ளது. அதே நேரத்தில், மீனு டீச்சராக வரும் மோக்ஷாவுடனான காட்சிகளும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெறுகின்றன.

கருணாஸ் - லிஸ்ஸி ஆண்டனி இடம்பெறும் அரசியல் கலந்த நகைச்சுவை டிராக், படத்தின் இரண்டாம் பாதியில் சிரிப்புக்கு பஞ்சம் இல்லாமல் நகர்கிறது. ஆணாதிக்க சிந்தனைகளை கேள்விக்குட்படுத்தும் வசனங்களும், சமூக கருத்துகளும் கதையோடு இயல்பாக இணைக்கப்பட்டுள்ளன.
வீரா - கீர்த்தியின் மகளாக நடித்துள்ள சிறுமி ஜாரா, தனது இயல்பான நடிப்பால் பல காட்சிகளில் கவனத்தை ஈர்க்கிறார். குறிப்பாக குடும்பம் மீண்டும் ஒன்று சேரும் தருணங்களில் அவரது நடிப்பு படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது.
அதே நேரத்தில், படத்தின் வில்லனாக வரும் தாரக் பொன்னப்பாவின் கதாபாத்திரம் எதிர்பார்த்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. வில்லன் தொடர்பான திரைக்கதை மிகவும் பலவீனமாக எழுதப்பட்டிருப்பது படத்தின் முக்கிய குறையாக தெரிகிறது. மேலும், நீதிமன்றம் மற்றும் விவாகரத்து தொடர்பான சில காட்சிகள் இன்னும் ஆழமாக அமைந்திருக்கலாம் என்ற எண்ணத்தையும் ஏற்படுத்துகின்றன.
மொத்தத்தில், கட்டா குஸ்தி 2 முதல் பாகத்தின் வெற்றியை அப்படியே மீண்டும் உருவாக்கவில்லை என்றாலும், குடும்பம் முழுவதும் ரசிக்கக்கூடிய பொழுதுபோக்கு திரைப்படமாக அமைந்துள்ளது. நகைச்சுவை, குடும்ப உணர்வு, நல்ல நடிப்பு ஆகியவற்றுக்காக ஒரு முறை கண்டிப்பாக பார்க்கக்கூடிய படமாக கட்டா குஸ்தி 2 இருக்கிறது.
Listen News!