முன்னணி நடிகர் விஜய் நடிப்பில், இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜனநாயகன்’ பொங்கல் வெளியீடாக பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறது. இப்படம் வருகின்ற ஜனவரி 9ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு ஏற்கனவே அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
விஜயின் திரைப்பட வாழ்க்கையில் மிக முக்கியமான படமாக பார்க்கப்படும் இந்த ‘ஜனநாயகன்’, அவரது அரசியல் பயணத்திற்கு முன் வெளிவரும் கடைசி படம் என்பதால், ரசிகர்களிடையே கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இந்த நிலையில், தற்போது ‘ஜனநாயகன்’ படத்தைச் சுற்றி ஒரு புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது, படத்தின் வெளியீட்டிற்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், இதுவரை தணிக்கைக் குழு படத்திற்கு சான்றிதழ் வழங்கவில்லை என்ற தகவல் வெளியாகி, திரையுலகில் பேசுபொருளாக மாறியுள்ளது.

தகவல்களின் படி, கடந்த டிசம்பர் 19ஆம் தேதி ‘ஜனநாயகன்’ திரைப்படம் தணிக்கைக்காக அனுப்பப்பட்டது. முதல் கட்ட தணிக்கையின் போது, சில காட்சிகள் மற்றும் வசனங்களில் மாற்றங்கள் செய்ய வேண்டும் என்றும், சில அரசியல் சார்ந்த வசனங்களை நீக்க வேண்டும் என்றும் தணிக்கைக் குழு பரிந்துரை செய்ததாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து, படக்குழு தணிக்கைக் குழு பரிந்துரைத்த மாற்றங்களை செய்து, குறிப்பிட்ட வசனங்களை நீக்கி, படத்தை மீண்டும் தணிக்கைக்கு சமர்ப்பித்துள்ளனர். ஆனால், மாற்றங்கள் செய்யப்பட்டு மீண்டும் சமர்ப்பிக்கப்பட்ட பிறகும், இதுவரை படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படவில்லை.
இதனால், படத்தின் திட்டமிட்ட வெளியீட்டு தேதியான ஜனவரி 9ம் தேதி பாதிக்கப்படுமா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது. இந்த சூழ்நிலையில், ‘ஜனநாயகன்’ படக்குழு நீதிமன்றத்தை நாடுவது குறித்து ஆலோசித்து வருவதாக சினிமா வட்டாரங்களில் தற்பொழுது தகவல்கள் வெளியாகியுள்ளன.
Listen News!