இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில், நடிகர் விஜய் நடித்துள்ள மிகப்பெரிய எதிர்பார்ப்புக்குரிய திரைப்படமான ‘ஜனநாயகன்’ பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 9ஆம் தேதி திரைக்கு வர உள்ளது என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், படம் வெளியாக இன்னும் மூன்று நாட்களே இருக்கும் நிலையில், இதுவரை தணிக்கை குழுவின் சான்றிதழ் கிடைக்காதது ரசிகர்களிடையே பெரும் குழப்பத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.
‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு, எடிட்டிங் உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்ப பணிகளும் கடந்த மாதமே முழுமையாக நிறைவடைந்துள்ளதாக படக்குழு தெரிவித்திருந்தது. ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம், அரசியல் மற்றும் சமூக கருத்துகளை மையமாகக் கொண்ட கமர்ஷியல் படமாக உருவாகியுள்ளது என்று கூறப்படுகிறது.

இந்த படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும், முக்கிய கதாபாத்திரத்தில் மமிதா பைஜூ நடித்திருப்பது ரசிகர்களிடையே கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தவிர, பிரியாமணி, பாபி தியோல், கவுதம் மேனன், நரேன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து, கடந்த மாதமே தணிக்கை குழுவிற்கு படம் அனுப்பப்பட்டதாக படக்குழு தெரிவித்திருந்தது. ஆனால், இதுவரை யு/ஏ சான்றிதழ் எதுவும் வழங்கப்படவில்லை. இதனால், படம் குறிப்பிட்ட தேதியில் வெளியாகுமா என்ற சந்தேகம் ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.
இந்த சூழலில், ‘ஜனநாயகன்’ படத்தின் தயாரிப்பு நிறுவனம், தணிக்கை சான்றிதழ் வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
வழக்கு விசாரணையின் போது, சென்சார் போர்டு தரப்பில் ஆஜரான சொலிசிடர் ஜெனரல் சுந்தரேசன், “படத்தை ஜனவரி 9ஆம் தேதி வெளியிட முடிவு செய்துவிட்டு, அதற்குப் பிறகே தணிக்கை சான்றிதழுக்கு விண்ணப்பித்து, உடனடியாக சான்றிதழ் வழங்க வேண்டும் என்று கேட்பது எப்படி சாத்தியம்?” என்று நீதிமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த நீதிபதி, “படத்தை ஏன் மறு ஆய்வு குழுவுக்கு அனுப்பினீர்கள்? அதற்கான ஆவணங்களை நாளை தாக்கல் செய்ய வேண்டும்”என்று சென்சார் போர்டுக்கு உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை தொடர்ந்து, ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடர்பான வழக்கு நாளை மதியம் 2.15 மணிக்கு மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.
Listen News!