ஹெச். வினோத் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜனநாயகன்’, அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே இப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. அரசியல் பின்னணியுடன் உருவாகியுள்ள இப்படம், ஜனவரி 9ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது.
ஆனால் தற்போது, படத்தின் சென்சார் சான்றிதழ் தொடர்பான குழப்பம், ரசிகர்களையும் சினிமா வட்டாரத்தையும் உச்சக்கட்ட குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
சமீபத்தில் சமூக வலைத்தளங்களில், ‘ஜனநாயகன்’ படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ (U/A) சான்றிதழ் வழங்கிவிட்டதாகவும், படத்தின் மொத்த நீளம் 3 மணி நேரம் 3 நிமிடங்கள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்த செய்தி விஜய் ரசிகர்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியது. ஏனெனில், படம் ரிலீஸாக இன்னும் சில நாட்களே இருந்த நிலையில், சென்சார் சான்றிதழ் கிடைத்துவிட்டது என்ற தகவல் பெரிய தடையை தாண்டியதாக கருதப்பட்டது.
எனினும், தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் (KVN Productions) எந்தவிதமான அதிகாரபூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. இதனால்,“உண்மையிலேயே சென்சார் சான்றிதழ் கிடைத்துவிட்டதா?” என்ற சந்தேகங்கள் ரசிகர்களிடையே எழுந்தன.
இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவல்கள் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அதாவது, ‘ஜனநாயகன்’ படத்திற்கு இன்னும் அதிகாரபூர்வமாக சென்சார் சான்றிதழ் வழங்கப்படவில்லை என்பதே உண்மை என தெரிய வந்துள்ளது.
இதன் மூலம், முன்பு வெளியான யு/ஏ சான்றிதழ் குறித்த தகவல்கள் உறுதி செய்யப்படாதவை என தெரிகிறது. இந்த நிலையில், படத்தை தயாரித்த கேவிஎன் நிறுவனம், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளது.
அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய அம்சங்களாக, ‘ஜனநாயகன்’ படம் ரிலீஸாக இன்னும் மூன்று நாட்களே உள்ளன.இதுவரை தணிக்கை குழு சான்றிதழ் வழங்கப்படவில்லை.கடந்த மாதமே படத்தை தணிக்கை குழுவுக்கு அனுப்பியுள்ளோம்.டிசம்பர் 19ஆம் தேதி தணிக்கை குழுவினர் படத்தை பார்த்துள்ளனர்
அவர்கள் தெரிவித்த சில மாற்றங்களை செய்து, மறு தணிக்கைக்கும் அனுப்பப்பட்டுள்ளது. இருந்தும் இதுவரை சென்சார் சான்றிதழ் வழங்கப்படவில்லை. இந்த தாமதம், படத்தின் ரிலீஸை பெரிதும் பாதிக்கும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கை அவசர வழக்காக எடுத்துக்கொண்டு, இன்னும் சற்று நேரத்தில் விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சென்சார் சர்ச்சை காரணமாக, விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தங்கள் கவலையையும், கோபத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.
Listen News!