தமிழ் சினிமாவில் தற்போது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படமாக தளபதி விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படம் பேசப்பட்டு வருகிறது. ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம், வரும் ஜனவரி 9ஆம் தேதி உலகம் முழுவதும்உள்ள திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘பராசக்தி’ திரைப்படம், ஜனவரி 10ஆம் தேதி வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகி, இரண்டு பெரிய படங்கள் தொடர்ச்சியாக ரிலீஸாக இருப்பது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
‘பராசக்தி’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில், சிவகார்த்திகேயன் பேசிய சில விஷயங்கள், சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தின. அதில், விஜயுடன் பேசிவிட்டேன் என்றும், அதற்குப் பிறகு தான் தனது படம் ரிலீஸ் தேதியை முடிவு செய்ததாகவும் சிவகார்த்திகேயன் கூறியிருந்தார்.
இந்த நிலையில், பிரபல சினிமா பத்திரிக்கையாளர் மற்றும் வலைப்பேச்சு பிரபலம் பிஸ்மி, இந்த விவகாரம் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

பிஸ்மி அதன்போது, “சிவகார்த்திகேயன் பராசக்தி இசை வெளியீட்டு விழாவில் சொன்னது எல்லாமே பொய். கேமரா இல்லாமலும் அவர் நன்றாகவே நடிக்கிறார். ஒருவேளை சிவகார்த்திகேயன் விஜயிடம் பேசினாலும், விஜய் அவரிடம் ‘உங்கள் படத்தை தள்ளி வையுங்கள்… உங்களால் என் படத்தின் வசூல் பாதிக்கும்’ என்று சொல்வாரா?
சிவகார்த்திகேயன் படம் வந்தால் தன்னுடைய படத்தின் வசூல் பாதிக்கும் என்று விஜய் ஒருபோதும் நினைக்க மாட்டார்.” என்று கூறியுள்ளார்.
பிஸ்மி தனது விமர்சனத்தில் வசூல் தொடர்பாகவும் பேசினார். அதாவது, “9ஆம் தேதி ஜனநாயகன் பாருங்கள், 10ஆம் தேதி என் படத்துக்கு வாருங்கள் என்கிறார். குறைந்தபட்சம் 5 நாட்கள் மற்ற படங்களின் போட்டி இல்லாமல் இருந்தால் தான் ஒரு பெரிய படம் தனது முழு வசூலை எடுக்க முடியும். இது சிவகார்த்திகேயனுக்கு தெரியாதா?”என்று கேள்வியும் எழுப்பினார்.
இதோடு நிற்காமல், பிஸ்மி மேலும், “ஒருவேளை ஜனநாயகன் படம் எதிர்பார்த்த வசூலை பெறாமல் போனால், ‘விஜய் படத்தையே நான் காலி செய்து விட்டேன்’ என்று மார்தட்டிக் கொள்வார் சிவகார்த்திகேயன்.”என்று கூறியுள்ளார்.
Listen News!