‘வட்டி காசுலவாடா’ என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் நடிகர் ரவிமோகன் தெலுங்கு சினிமாவில் அறிமுகமாக உள்ளார். இப்படத்தில் அவர் திருப்பதி ஏழுமலையானாக சிறப்புத் தோற்றத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அவரது தெலுங்கு அறிமுகம் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ரவிமோகன், தற்போது ‘கராத்தே பாபு’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதனுடன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் ‘ஆன் ஆர்டினரி மேன்’ படத்தை தயாரித்து, இயக்கி, நடித்து வருகிறார். இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

இந்நிலையில், ரவிமோகன் தனது 46-வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் பலரும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்தனர். இதையடுத்து ‘வட்டி காசுலவாடா’ படக்குழுவினரும் ரவிமோகனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.
‘ஓம் நமோ வேங்கடேசாய’ என்ற ஆன்மிக வாசகத்துடன் வெளியாகியுள்ள அந்த போஸ்டரில், மனிதக் கரத்தைப் பிடித்தபடி பெருமாளின் கரங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இப்படத்தில் ரவிமோகன் திருப்பதி ஏழுமலையானாக சிறப்புத் தோற்றத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.
தேஜ் உப்பலபாடி இயக்கும் இப்படத்தை ஏ.கே. என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் ஏடிவி ஒரிஜினல்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. பான்-இந்தியா அளவில் வெளியாகும் இப்படத்தில் மஞ்சு மனோஜ் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்கிறார். நகைச்சுவை, குடும்ப உணர்வுகள் மற்றும் நடுத்தர வர்க்க வாழ்க்கையை மையமாகக் கொண்டு படம் உருவாகி வருகிறது.
Listen News!