• Jan 18 2025

மழை பிடிக்காத மனிதன்.. பார்த்த ரசிகர்களுக்கும் பிடிக்கவில்லை.. திரை விமர்சனம்

Sivalingam / 5 months ago

Advertisement

Listen News!

விஜய் ஆண்டனி நடிப்பில், விஜய் மில்டன் இயக்கத்தில் உருவான ’மழை பிடிக்காத மனிதன்’ திரைப்படம் நேற்று வெளியாகிய நிலையில் இந்த படம் ரிலீஸ் ஆன ஒரு சில மணி நேரத்தில் தனக்கே தெரியாமல் சில காட்சிகளை இணைக்கப்பட்டதாக இயக்குனர் தனது ஆதங்கத்தை தெரிவித்த நிலையில், படம் முடிந்து வெளியே வரும் ரசிகர்களும் தங்களுக்கும் இந்த படம் பிடிக்கவில்லை என கூறியுள்ளனர்.

அமைச்சர் ஒருவர் விஜய் ஆண்டனியையும் அவரது மனைவியையும் ஒரு மழை இரவில் கொலை செய்ய திட்டமிடும் போது அதில் அவரது மனைவி மட்டும் இறந்து விடுகிறார். மழை இரவில் மனைவியை பறிகொடுத்ததால் மழை பிடிக்காத மனிதனாகும் விஜய் ஆண்டனியின் மொத்த வாழ்க்கையின் தலைகீழாக மாறிய நிலையில் அமைச்சரிடம் இருந்து அவரது உயிரை அவரது நண்பரான சரத்குமார் அவரை அந்தமானுக்கு அழைத்து சென்று விடுகிறார்.

அந்தமானில் தான் யார் என்பதை அடையாளம் சொல்லாமல் வாழும் விஜய் ஆண்டனிக்கு மேகா ஆகாஷ் உட்பட இரண்டு நண்பர்கள் கிடைக்கிறார்கள். இந்த நிலையில் அந்தமானில் உள்ள காவல்துறை அதிகாரி முரளி ஷர்மாவுக்கு ஒரு பிரச்சனை வர, அதை சரி செய்ய களமிறங்கும் போது விஜய் ஆண்டனியின் முந்தைய வாழ்க்கை கொஞ்சம் கொஞ்சமாக வெளியாகிறது. இதனால் அவருக்கு ஏற்படும் பிரச்சனை என்ன என்பதுதான் ’மழை பிடிக்காத மனிதன்’ திரைப்படத்தின் மீதிக்கதை.

விஜய் ஆண்டனி வழக்கமான தனது பாணியில் நடித்து சலிப்பை கொடுத்துள்ளார். சில இடங்களில் நக்கலான நடிப்பால் சிரிக்க வைக்க முயற்சிக்கிறார். இன்னும் எத்தனை படத்தில் தான் அமைதியான, அதே நேரத்தில் ஆவேசமாகும் கேரக்டரில் நடிக்க போகிறார் என தெரியவில்லை.



முரளி ஷர்மா ஆரம்பத்தில் துறுதுறு என இருந்தாலும் சிறிது நேரத்தில் சோர்வடைய வைக்கிறார். அமைச்சர் கேரக்டரில் நடித்த ஏ.எல்.அழகப்பன் பெரிய அளவில் கவனத்தை ஈர்க்கவில்லை. சரத்குமாரை இன்னும் இந்த படத்தில் பயன்படுத்தியிருக்கலாம். மேகா ஆகாஷ், சரண்யா பொன்வண்ணன்,   ஆகியோர்களுக்கு பெரிய அளவில் நடிப்புக்கான வாய்ப்பு இல்லை. சத்யராஜை கௌரவ தோற்றத்தில் மட்டும் பயன்படுத்தி உள்ளனர்.

புதுமையான முயற்சிகளுடன் இந்த படம் தொடங்கினாலும் ஆக்சன் காட்சிகளில்  மட்டும் ஓரளவு சுவாரஸ்யம் தெரிகிறது. மற்றபடி அந்தமானின் அழகான காட்சிகள் கண்ணுக்கு விருந்தாக இருந்தாலும் படத்தின் திரைக்கதையில் சுவாரஸ்யம்  இல்லை என்பதால் ரசிக்க முடியவில்லை.

தனது அடையாளத்தை மறைத்து விட்டு வாழும் கதாநாயகன் குறித்த படங்கள் ஏற்கனவே தமிழில் அதிகம் வந்திருப்பதால் பல படங்களை இந்த படம் ஞாபகப்படுத்துகிறது. இயக்குனர் விஜய்  மில்டன் ஆக்சன் மற்றும் ஒளிப்பதிவுக்கு கொடுத்த முக்கியத்துவத்தை திரைக்கதையில் கொடுத்திருந்தால் இந்த படம் இன்னும் ரசிக்கும்படியாக இருந்திருக்கும். மொத்தத்தில் ’மழை பிடிக்காத மனிதன்’ படத்தை பார்த்த ரசிகர்களுக்கும் பிடிக்கவில்லை என்பதுதான் துரதிஷ்டம்.

Advertisement

Advertisement