ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், சிவகார்த்திகேயன் மற்றும் சாய்பல்லவி முதன்மை வேடங்களில் நடித்த “அமரன்” திரைப்படம் கடந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு வெளியானது. படம் வெளியான சில மணி நேரங்களிலேயே பாராட்டு வெள்ளம் பெருகி, முதல் வாரத்தில் முன்பதிவுகள் முதல் வசூல் வரை சாதனைகள் படைத்து, ஆண்டின் மிகப்பெரிய வெற்றி படங்களில் ஒன்றாக திகழ்ந்தது. விமர்சகர்களும், ரசிகர்களும் ஒரு மனதாகப் புகழ்ந்த இந்த படைப்பு, தற்போது மீண்டும் பேசப்பட்டு வருகிறது.

சமீபத்தில், இப்படம் கேரள திரைப்பட விமர்சகர்கள் சங்கத்தின் விருது விழாவில் ‘சிறந்த பிறமொழி திரைப்படம்’ என்ற விருது மற்றும் 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் தங்க மயில் விருதுக்கான பரிந்துரை ஆகியவற்றைப் பெற்றிருந்தது.
இந்த இரண்டு பெருமைகளும் படக்குழுவினருக்கு, குறிப்பாக சிவகார்த்திகேயனுக்கு மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தீபாவளியை முன்னிட்டு வெளியான அமரன், குடும்ப ரசிகர்கள் முதல் இளைஞர்கள் வரை அனைவரையும் கவர்ந்தது. படம் திரையரங்குகளில் ஓடிய காலம் முழுவதும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதோடு, வசூல் ரீதியாக 300 கோடிக்கு அதிகமாகவும் பெற்றிருந்தது.
ராஜ்குமார் பெரியசாமி உருவாக்கிய கதையில் சிவகார்த்திகேயனின் நடிப்பு, சாய்பல்லவியின் உணர்ச்சி மிகுந்த வேடம், ஜி.வி. பிரகாஷின் இசை என ஒவ்வொரு கூறும் படத்தை உறுதியான கலைப் படைப்பாக உயர்த்தியது.

இந்நிலையில் தற்பொழுது சிவகார்த்திகேயன், “அமரன் படம் இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது எனக்கு மிகப் பெரிய பெருமை. இப்படம் ரிலீஸ் ஆகி ஒரு வருடமாகிவிட்டது என்றாலும்... இன்று ரிலீஸ் ஆனது போல இருக்கிறது.” எனக் கூறியுள்ளார். இந்தக் கருத்துகள் தற்பொழுது வைரலாகி வருகின்றது.
Listen News!