• Jan 19 2025

சூர்யாவின் அடுத்த படம் டிராப்? விக்ரம், சிவகார்த்திகேயனை அணுகிய முன்னணி இயக்குனர்..!

Sivalingam / 8 months ago

Advertisement

Listen News!

சூர்யாவின் அடுத்த திரைப்படத்தை இயக்க இருந்த முன்னணி இயக்குனர் அவருக்கு பதிலாக சிவகார்த்திகேயன் அல்லது விக்ரம் படத்தை இயக்க இருப்பதாகவும் ஒரே நேரத்தில் இருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

சூர்யா நடிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில் உருவான ’சூரரை போற்று’ திரைப்படம் நல்ல வெற்றி பெற்றதை அடுத்து இருவரும் மீண்டும் ’புறநானூறு’ என்ற திரைப்படத்தில் இணைய இருப்பதாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று கூறப்பட்ட நிலையில் திடீரென இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் கதையில்  சில மாற்றங்களை சூர்யா சொல்ல அதற்கு சுதா கொங்கரா ஒப்புக்கொள்ளவில்லை என்று கூறப்பட்டது. இதனை அடுத்து ’புறநானூறு’ திரைப்படம் காலதாமதம் ஆகும் என்று அறிவிப்பு வெளியான நிலையில் தற்போது அந்த படம் கிட்டத்தட்ட ட்ராப் என்றே கூறப்படுகிறது.

இந்த நிலையில் சுதா கொங்கரா இயக்க இருக்கும் இன்னொரு கதையில் நடிக்க விக்ரம் இடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் இன்னொரு பக்கம் சிவகார்த்திகேயன் உடனும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் இருவரில் ஒருவர் இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

ஆனால் அதே நேரத்தில் தற்போது ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வரும் சிவகார்த்திகேயன், அடுத்ததாக ’டான்’ இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருப்பதால் அவர் சுதா கொங்கரா படத்தை ஒப்புக்கொண்டாலும் 2026 ஆம் ஆண்டு தான் நடிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் விக்ரம் தற்போது ’வீர தீர சூரன்’ என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் அடுத்ததாக அவர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. எனவே இருவரும் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்க ஒப்புக்கொண்டாலும் உடனடியாக நடக்குமா? என்பது சந்தேகம் தான் என கூறப்படுகிறது.

Advertisement

Advertisement