நடிகர் கமல்ஹாசன் கடந்த 1981-ம் ஆண்டு தொடங்கிய முன்னணி திரைப்படத் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், தற்போது பல்வேறு முக்கிய திரைப்படங்களை தயாரித்து வருகிறது. இந்நிலையில், தங்களது நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி நடைபெறும் மோசடிகள் குறித்து தயாரிப்பு நிறுவனம் முக்கிய எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம், ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘தர்மன்’ மற்றும் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘சேயோன்’ உள்ளிட்ட படங்களை தயாரித்து வருகிறது. இதனிடையே, பிரபல தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் நடிகர்களின் பெயர்களை பயன்படுத்தி, சினிமாவில் நடிக்க வாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி பணம் பறிக்கும் மோசடிகள் அதிகரித்து வருகின்றன.

இதனைத் தொடர்ந்து ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் வெளியிட்டுள்ள அறிக்கையில், தாங்கள் தயாரிக்கும் திரைப்படங்களுக்காக எந்தவொரு காஸ்டிங் ஏஜென்ட்களையும் நியமிக்கவில்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. மேலும், தங்களது படங்களில் நடிக்க வாய்ப்பு வாங்கித் தருவதாகக் கூறி யாரேனும் தொடர்பு கொண்டால், அந்த தகவல்களை நம்ப வேண்டாம் என்றும் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் பெயரை அனுமதியின்றி பயன்படுத்தி மோசடியில் ஈடுபடுபவர்கள் மீது சட்டரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நிறுவனம் எச்சரித்துள்ளது. இந்த அறிவிப்பு சினிமாவில் வாய்ப்பு தேடும் இளம் நடிகர்கள் மற்றும் கலைஞர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.
— Raaj Kamal Films International (@RKFI) September 8, 2026
Listen News!