இன்றைய தலைமுறையினரிடம் பொறுமை குறைந்து வருவதற்கு சமூக வலைதளங்களின் அதிகப்படியான பயன்பாடும் முக்கிய காரணமாக இருக்கலாம் என நடிகை காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார். சமீபத்திய பேட்டி ஒன்றில் உறவுகள் மற்றும் திருமண வாழ்க்கை குறித்து அவர் பகிர்ந்த கருத்துகள் தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகின்றன.
பல தம்பதிகள் ஒன்றாக வெளியே உணவு அருந்தச் செல்லும்போதுகூட, ஒருவருடன் ஒருவர் மனம் விட்டுப் பேசுவதைவிட செல்போன்களில் மூழ்கியிருப்பதை பார்க்க முடிகிறது என காஜல் குறிப்பிட்டுள்ளார். இதனால் கணவன் - மனைவிக்கிடையே நடைபெறும் இதயப்பூர்வமான உரையாடல்கள் குறைந்து, நாளடைவில் இருவருக்கும் இடையே உணர்வுபூர்வமான இடைவெளி அதிகரிக்கக்கூடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், சமூக வலைதளங்களில் காணப்படும் போலியான அல்லது முழுமையாக வெளிப்படுத்தப்படாத வாழ்க்கை முறைகளை பார்த்து, அதனுடன் தங்களது சொந்த வாழ்க்கையை ஒப்பிட்டுப் பார்ப்பதும் உறவுகளில் தேவையற்ற அழுத்தத்தை ஏற்படுத்துவதாக காஜல் அகர்வால் கூறியுள்ளார்.
தனது திருமண வாழ்க்கையைப் பற்றியும் பேசிய அவர், தானும் தனது கணவரும் வாரத்திற்கு ஒருமுறையாவது வெளியே சென்று, செல்போன்களை ஒதுக்கிவிட்டு இருவருக்கும் மட்டுமான நேரத்தை செலவிடுவதை வழக்கமாக வைத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
உறவில் அன்பும் புரிதலும் நீடிக்க, ஒருவருக்கொருவர் நேரம் ஒதுக்குவது மிகவும் அவசியம் என்ற அவரது கருத்து தற்போது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
Listen News!