நடிகர் விஜய் நடித்துள்ள புதிய திரைப்படம் ‘ஜனநாயகன்’ தற்போது சட்ட ரீதியான காரணங்களால் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் ஜனவரி 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு, எடிட்டிங் உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்ப பணிகளும் முழுமையாக முடிவடைந்து, கடந்த மாதமே தணிக்கைக்காக (CBFC) அனுப்பப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்திருந்தது.
இந்த படத்தில், நடிகர் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ள நிலையில், முக்கிய கதாபாத்திரத்தில் மமிதா பைஜூ நடித்துள்ளார். அரசியல் மற்றும் சமூக பின்னணியைக் கொண்ட கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படம், விஜயின் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

படம் முழுமையாக தயாராகி, தணிக்கைக்காக அனுப்பப்பட்ட நிலையில், இதுவரை தணிக்கை சான்றிதழ் வழங்கப்படவில்லை என்பதே தற்போது எழுந்துள்ள முக்கிய பிரச்சினையாகும்.
வெளியீட்டுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், தணிக்கை சான்றிதழ் கிடைக்காதது தயாரிப்பு நிறுவனத்தை கவலைக்குள்ளாக்கியது.
இதனைத் தொடர்ந்து, ‘ஜனநாயகன்’ படத்திற்கு உடனடியாக தணிக்கை சான்றிதழ் வழங்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தயாரிப்பு நிறுவனம் அவசர மனு தாக்கல் செய்தது.
இந்த வழக்கு நேற்றைய தினம் சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அதன் தொடர்ச்சியாக, இன்று மதியம் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. விசாரணையின் போது, நீதிபதி தணிக்கை நடைமுறைகள் குறித்து பல முக்கிய கேள்விகளை எழுப்பினார்.
நீதிமன்றத்தில், “ஒரு திரைப்படத்தை தணிக்கை குழு பார்வையிட்டு, U/A சான்றிதழ் வழங்க முடிவு செய்த பிறகு, ஏன் அந்தப் படம் மறுஆய்வுக்கு அனுப்பப்பட்டது?”என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த சென்சார் போர்டு சார்பில் ஆஜரான ஒன்றிய அரசு வழக்கறிஞர், முக்கிய விளக்கத்தை அளித்தார்.
அதாவது வழக்கறிஞர் நீதிமன்றத்தில், "ஒரு திரைப்படத்தை தணிக்கை குழு பார்வையிட்ட பிறகும் அதனை மறுதணிக்கைக்கு உத்தரவிட தணிக்கை குழு தலைவருக்கு அதிகாரம் உண்டு. மறு தணிக்கை குறித்து தயாரிப்பு குழுவிற்கு தகவல் அனுப்பினோம். 14 காட்சிகளை நீக்க ஏற்கனவே பரிந்துரைக்கப்பட்டது." என்று கூறியுள்ளது.
Listen News!