• Jan 19 2025

ராமராஜனின் ரீஎண்ட்ரி ரசிக்கும் வகையில் இருந்ததா? ‘சாமானியன்’ திரைவிமர்சனம்..!

Sivalingam / 7 months ago

Advertisement

Listen News!

நடிகர் ராமராஜன் நீண்ட இடைவேளைக்கு பிறகு ரீஎன்ட்ரி ஆகியுள்ள ‘சாமானியன்’ என்ற திரைப்படம் வெளியாகி உள்ள நிலையில் இந்த திரைப்படம் அவருக்கு கை கொடுக்குமா? ரசிகர்கள் ரசிக்கும் வகையில் இருந்ததா? என்பதை இந்த திரை விமர்சனத்தில் பார்ப்போம்.
மதுரையில் இருந்து தனது நண்பர்கள் எம்எஸ் பாஸ்கர், ராதாரவி ஆகியோர்களை பார்க்க வரும் ராமராஜன் மறுநாள் தியாகராய நகரில் உள்ள வங்கிக்கு செல்லும் ராமராஜன் அங்கு திடீரென வெடிகுண்டு துப்பாக்கி காட்டி அந்த வங்கியை தனது கட்டுப்பாட்டுக்கு கொண்டு வருகிறார்.

அதேபோல் அவரது நண்பர் எம்எஸ் பாஸ்கர் வங்கி மேனேஜரின் வீட்டையும், துணை மேனேஜர் வீட்டை ராதாரவையும் கட்டுக்குள் கொண்டு வருகிறார்கள். மூன்று சீனியர்கள் வங்கியையும் வங்கி மேனேஜர்களையும் எதற்காக தங்களுடைய கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்தார்கள்? அவர்களுடைய பின்னணி என்ன? காவல்துறை வங்கியையும் வங்கியில் பிணைக் கைதிகளாக இருக்கும் வாடிக்கையாளர்களையும் மீட்டதா? என்பதற்கான பதில் தான் இந்த ‘சாமானியன்’ திரைப்படம்.

ஆரம்பத்தில் இருந்தே கதாநாயகன் ராமராஜன் ஆக்சன் மற்றும் மிரட்டல்களை கையில் எடுத்ததோடு ஆங்காங்கே கருத்துக்களையும் பதிவு செய்து வருகிறார். பாசம், சென்டிமென்ட், ஆக்சன் என பல்வேறு விதமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கும் அவர் நீண்ட காலத்திற்கு பிறகு ரீஎன்ட்ரி ஆனாலும் நடிப்பில் பாஸ் செய்து இருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். ராமராஜனின் நண்பர்களாக வரும் எம்எஸ் பாஸ்கர், ராதாரவி ஆகியோர்களின் நடிப்பு படத்தின் தேவையான காட்சிகளுக்கு கை கொடுத்துள்ளது.

லியோ சிவகுமார், போஸ் வெங்கட், ரவிக்குமார், தீபா சங்கர் உள்ளிட்ட துணை கதாபாத்திரங்கள் தங்களுக்கு கொடுத்த வேலையை சரியாக செய்துள்ளனர். இளையராஜாவின் இசை பாடல்கள் பெரிதாக இல்லாவிட்டாலும் பின்னணி இசையால் காட்சிகளை மெருகேற்ற உதவி செய்துள்ளார்.

கதாசிரியர் கார்த்திக் குமார் வங்கிக்கும் ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கும் இருக்கும் கள்ள உறவை வெளிச்சம் போட்டு காட்ட முயற்சி செய்து இருக்கிறார். வீட்டு கடன் மூலமாக மக்களை எப்படி சுரண்டுகிறார்கள்? வீட்டு கடன் வாங்கும் மக்கள் எந்த அளவுக்கு சிரமப்படுகிறார்கள்? பெரு முதலாளிகளுக்கு வழங்கப்பட்ட கடன் மட்டும் தள்ளுபடி செய்யப்படுகிறது. ஆனால் வீட்டு கடன் வாங்கியவர்களை எந்த அளவுக்கு சிரமப்படுத்துகிறார்கள் என்பதை படத்தின் மூலம் சொல்ல வந்தாலும் ஒட்டுமொத்தமாக வீட்டு கடன் வாங்கும் மக்கள் மீதான ஒரு மோசமான பார்வையையும் இந்த படம் முன்வைக்கிறது என்பதை மறுத்து விட முடியாது.

இயக்குனர் ரஹேஷின் திரைக்கதை ஆங்காங்கே சீரியல் போல் மாறிவிடுகிறது, காட்சிகளும் தேவையான தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பது அயர்சியை தருகிறது. ராமராஜனின் கேரக்டர் உள்பட பல கேரக்டரின் பிளாஷ்பேக் காட்சிகள் அடிக்கடி வந்து படத்தின் மெயின் கதையை குழப்புகிறது. மொத்தத்தில் சமகால இளைஞர்களுக்கு புரியும் வகையில் திரைக்கதை அமைத்திருந்தால் இந்த சாமானியன் ஒரு மிகப்பெரிய வெற்றி படமாக இருந்திருக்கும்.

Advertisement

Advertisement