தமிழ் சினிமாவில் இளம் நடிகர்களில் ஒருவராக கவனம் பெற்று வரும் நடிகர் சண்முகபாண்டியன், தனது சமீபத்திய திரைப்படமான “கொம்புசீவி” மூலம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறார். கிராமிய பின்னணியுடன், வித்தியாசமான கதைக்களம் மற்றும் வலுவான நடிப்பால் இந்த படம் பேசுபொருளாக மாறியுள்ளது.

சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான “கொம்புசீவி” திரைப்படம், முதல் நாளிலிருந்தே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. சண்முகபாண்டியனின் நடிப்பு, கதையின் இயல்புத்தன்மை மற்றும் திரைக்கதை ஆகியவை படத்திற்கு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக கிராமப்புற ரசிகர்கள் மத்தியில் இந்த படம் பெரும் ஆதரவை பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், “கொம்புசீவி” படத்தை மதுரையில் ரசிகர்களுடன் இணைந்து பார்க்க நடிகர் சண்முகபாண்டியன் நேரில் சென்றுள்ளார். திரையரங்கில் ரசிகர்களுடன் அமர்ந்து படம் பார்த்த அவர், ரசிகர்களின் நேரடி கருத்துகளையும் எதிர்வினைகளையும் கவனித்தார்.

படம் முடிந்த பிறகு ரசிகர்கள் அளித்த பாராட்டுகள், சண்முகபாண்டியனை மகிழ்ச்சியில் ஆழ்த்தியதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த நடிகர் சண்முகபாண்டியன், “கொம்புசீவி” படம் குறித்தும், தனது எதிர்காலம் குறித்தும் மனம் திறந்து பேசினார்.
அப்போது அவர், “மக்கள் அனைவரும் படம் நல்லா வந்திருக்கு என்று சொல்கிறார்கள். அது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. ரசிகர்கள் நேரிலேயே பாராட்டும் போது, அதைவிட பெரிய விருது எதுவும் இல்லை.” என்று தெரிவித்தார்.
மேலும், “சினிமாவில் உச்சத்தை தொட்ட பிறகு தான் அரசியல். சினிமாவில் யார் இடத்தையும் பிடிக்க ஆசை இல்லை.. அப்பா விஜயகாந்த் பெயரை காப்பாற்றுவதே லட்சியம்.” என்றும் கூறியிருந்தார். இந்த வார்த்தைகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பலரும், சண்முகபாண்டியனின் பணிவு மற்றும் தந்தை மீது கொண்ட மரியாதையை பாராட்டி வருகின்றனர்.
Listen News!