தமிழ் திரையுலகில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள முக்கியமான திரைப்படங்களில் ஒன்றாக ‘பராசக்தி’ திகழ்கிறது. இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்தப் படம், ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில், படத்தின் கதைக்களம் தொடர்பான “World Of Parasakthi” என்ற சிறப்பு வீடியோ இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
“World Of Parasakthi” என்ற இந்த வீடியோ, கதையின் பின்னணி, முக்கிய கருப்பொருள் மற்றும் கதாபாத்திரங்களின் தன்மை குறித்து ரசிகர்களுக்கு ஒரு முன்னோட்டத்தை வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு வீடியோ தற்போது சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்று வரும் “பராசக்தி” கண்காட்சியில் பிரத்யோகமாக திரையிடப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
‘பராசக்தி’ படத்தை இயக்கியுள்ள சுதா கொங்கரா, இதற்கு முன் ‘இறுதிசுற்று’, ‘சூரரைப் போற்று’ போன்ற விமர்சன ரீதியாகவும், ரசிகர்களிடமும் பெரும் பாராட்டைப் பெற்ற திரைப்படங்களை இயக்கியவர். சமூக அக்கறை, உணர்ச்சிபூர்வமான கதைகள் மற்றும் வலுவான கதாபாத்திர வடிவமைப்பு ஆகியவை அவரது படங்களின் முக்கிய அம்சங்களாக இருந்து வருகின்றன. அதனால், ‘பராசக்தி’ படத்திலும் ஒரு ஆழமான சமூகப் பின்னணி மற்றும் உணர்ச்சிகரமான கதைக்களம் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
‘பராசக்தி’ படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து, ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். அத்துடன் இப்படம் 2025 ஜனவரி 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!