தமிழ் திரையுலகிலும், அரசியல் களத்திலும் தனித்துவமான முத்திரையை பதித்த நடிகரும், தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்தின் 2-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளை முன்னிட்டு, சென்னை கோயம்பேட்டில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் அதிகாலை முதலே பொதுமக்கள், தொண்டர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் எனப் பலரும் திரளாகக் கூடி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

விடியற்காலை முதல் நினைவிடம் முழுவதும் மக்கள் கூட்டத்தால் நிரம்பி காணப்படுகிறது. கையில் மலர் வளையங்கள், கேப்டன் விஜயகாந்தின் புகைப்படங்கள், கொடிகள் ஆகியவற்றுடன் வந்திருந்த ரசிகர்கள், “கேப்டன் வாழ்க”, “விஜயகாந்த் என்றும் எங்கள் இதயத்தில்” போன்ற முழக்கங்களை எழுப்பி தங்களின் மரியாதையை வெளிப்படுத்தினர்.
திரையுலகில் ஆக்ஷன் ஹீரோவாக அறிமுகமாகி, மக்கள் மனதில் “கேப்டன்” என்ற அடைமொழியுடன் நிலைத்திருக்கும் விஜயகாந்த், சினிமாவிலும் அரசியலிலும் நேர்மை, எளிமை மற்றும் மக்கள் மீது கொண்ட அக்கறை ஆகியவற்றால் தனி இடத்தை பிடித்தவர்.

இந்த நினைவு தினத்தில் நடிகர் கூல் சுரேஷ் விஜயகாந்த் நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தியுள்ளார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் கூல் சுரேஷ், விஜயகாந்த் மீது மக்கள் வைத்துள்ள அன்பை வெளிப்படுத்தும் வகையில் உணர்ச்சிபூர்வமான கருத்துகளை தெரிவித்தார்.
அவர் பேசுகையில்,“கேப்டனை மெரினா பீச்சில அடக்கம் பண்ணியிருந்தா கூட இந்த அளவுக்கு கூட்டம் வருமான்னு தெரியல. அவர் முதலமைச்சராக கூட இருந்தது இல்ல. ஆனா இவ்வளவு பெரிய கூட்டம் இங்கே கூடுறதுன்னா, மக்கள் அவர் மேல வைத்திருந்த அன்புதான் காரணம்” என்று நரம்பு புடைக்க பேசினார்.
Listen News!