தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன், தனது அடுத்த படமான ‘பராசக்தி’ மூலம் மீண்டும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவுள்ளார். சமூக சிந்தனை, வலுவான கதைக்களம் மற்றும் உணர்வுபூர்வமான காட்சிகளுக்காக அறியப்படும் இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படம், ஆரம்பத்திலிருந்தே திரையுலக வட்டாரங்களிலும் ரசிகர்களிடையிலும் பெரும் கவனம் பெற்று வருகிறது.

இந்த படத்தில், சிவகார்த்திகேயனுடன் அதர்வா, ரவி மோகன் உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். வித்தியாசமான கதைக்களம் மற்றும் நட்சத்திரக் கூட்டணியால் ‘பராசக்தி’ படம், சிவகார்த்திகேயனின் திரைப்பயணத்தில் ஒரு முக்கியமான படமாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், ‘பராசக்தி’ படத்தின் இசை வெளியீட்டு விழா ஜனவரி 3ஆம் தேதி நடைபெறவுள்ளது என படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக, சுதா கொங்கரா இயக்கம், சிவகார்த்திகேயனின் நடிப்பு மற்றும் G.V. பிரகாஷ் குமாரின் இசை ஆகியவை சேர்ந்து ஒரு சிறப்பான அனுபவத்தை வழங்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

இசை வெளியீட்டு விழா என்றாலே, அதில் பங்கேற்கும் சிறப்பு விருந்தினர்கள் குறித்த தகவல்கள் வேகமாக பரவுவது வழக்கம். அந்த வகையில், இந்த விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசன் கலந்து கொள்வார்கள் என்ற தகவல்கள் சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவின.
ஆனால், இந்த தகவல் முற்றிலும் வதந்தி என ‘பராசக்தி’ படத்தின் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் தற்போது தெளிவான விளக்கத்தை அளித்துள்ளார். அவர், “இசை வெளியீட்டு விழாவிற்கு ரஜினி, கமல் பங்கேற்பதாக வரும் தகவல்கள் அனைத்தும் வதந்தி தான். யார் கிளப்பி விடுகிறார்கள் என்றே தெரியவில்லை.”என்று கூறியுள்ளார்.
இந்த கருத்து, சமூக வலைத்தளங்களில் பரவி வந்த தவறான தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. தயாரிப்பாளர் நேரடியாக விளக்கம் அளித்துள்ளதால், ரசிகர்களும் இந்த விவகாரத்தில் தெளிவு பெற்றுள்ளனர்.
Listen News!