கரூரில் விஜய் மேற்கொண்ட தேர்தல் பரப்புரை கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்தவர்களின் குடும்பத்தை விஜய் நேரில் அழைத்து பேசி ஆறுதல் தெரிவித்தார். இந்தச் சம்பவம் தொடர்பில் விஜய்க்கு ஆதரவாகவும் எதிராகவும் பல கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், கரூர் துயர சம்பவம் தொடர்பில் அஜித் மனம் திறந்து பேசி இருக்கும் விஷயம் கவனத்தை ஈர்த்துள்ளது. அவர் தனியார் ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் கரூர் சம்பவம் பற்றி பேசியுள்ளார்.
இது தொடர்பில் அவர் கூறுகையில், தமிழ்நாட்டில் கூட்ட நெரிசல் தொடர்பில் பல சம்பவங்கள் நடக்கின்றன. நான் யாரையும் குற்றம் சொல்லவில்லை. இதற்கு அந்த தனி நபர் மட்டும் பொறுப்பல்ல. நாம் எல்லோரும் தான் பொறுப்பு. மீடியாவும் இதற்கு பொறுப்பு தான். இது ஒரு கூட்டு தோல்வியாகும். நானும் கூட இதற்கு பொறுப்பு தான். ஒருவர் மட்டும் இதற்கு பொறுப்பு அல்ல.

இந்த சமுதாயம் நிறைய மாறிவிட்டது. உங்கள் செல்வாக்கை காட்ட ஒரு கூட்டத்தை ஒன்று சேர்ப்பது முடிவுக்கு வரவேண்டும். கிரிக்கெட் பார்க்கவும் கூட்டம் கூடுகிறது. ஆனால் அங்கு இப்படி நடப்பதில்லை. திரையரங்குகளிலும் சில பிரபலங்களுக்கு மட்டும் தான் இப்படி நடக்கின்றது. இது ஒட்டுமொத்த திரையுலகத்தையும் உலக அளவில் தவறாக சித்தரிக்கின்றது.
தங்களுக்கு ரசிகர்களின் அன்பு தான் தேவை. அதற்காகத்தான் நாங்கள் கடுமையாக உழைக்கின்றோம். குடும்பத்தைப் பிரிந்து நிறைய நேரம் சூட்டிங் ஸ்பாட்டில் இருக்கின்றோம். ஒரு படத்தை உருவாக்க பல காயங்களை ஏற்கின்றோம்.
இவை அனைத்தும் மக்களின் அன்புக்காக தான். ஆனால் அந்த அன்பை காட்டுவதற்கு உயிரைப் பணயம் வைக்க வேண்டாம். முதல் நாள் முதல் காட்சி கலாச்சாரத்தை ஊடகங்களும் ஊக்குவிக்கின்றன என்று அஜித் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.
Listen News!