பிரபாஸ் நடித்த ’கல்கி 2898 ஏடி’ திரைப்படம் நேற்று வெளியான நிலையில் இந்த படத்தின் முதல் நாள் வசூல் ’ஜவான்’ உள்பட பல பிரபலங்களின் வசூலை பின்னுக்கு தள்ளி உள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் இன்னும் இரண்டு படங்களின் வசூலை இந்த படத்தால் முறியடிக்க வில்லை என்றும் சில ஆண்டுகளாக இந்த இரண்டு படங்கள் தான் அதிக வசூல் செய்து சாதனை செய்த பட்டியலில் உள்ளது என்றும் கூறப்படுகிறது.
பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் உள்பட பலர் நடிப்பில் நாக் அஸ்வின் இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையில் உருவான திரைப்படம் ’கல்கி 2898 ஏடி’. இந்த படம் நேற்று தமிழ் உள்பட ஐந்து மொழிகளில் பிரமாண்டமாக உலகம் முழுவதும் வெளியான நிலையில் இந்த படத்தின் முதல் நாள் வசூல் சாதனை செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று உலகம் முழுவதும் ’கல்கி 2898 ஏடி’ திரைப்படம் 180 கோடி வசூல் ஆகியுள்ளதாகவும் இந்தியாவில் 95 கோடியும் வெளிநாடுகளில் 85 கோடி வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் பட்ஜெட் ரூ.600 கோடி என்ற நிலையில் இன்னும் 2 நாட்கள் இதேபோன்று வசூல் செய்தால் மட்டுமே படத்தின் முதலீடு பணம் தயாரிப்பாளருக்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் உலக அளவில் முதல் நாளில் மிகப்பெரிய வசூல் செய்த படங்களை ’கல்கி 2898 ஏடி’ பின்னுக்கு தள்ளிவிட்டதாக கூறப்படுகிறது. குறிப்பாக ’கேஜிஎப் 2’ ரூ.159 கோடியும், ’சலார்’ ரூ.158 கோடி, ’லியோ’ ரூ.142 கோடி, ’சாஹோ’ ரூ.130 கோடி, ’ஜவான்’ ரூ.129 கோடி வசூல் செய்த நிலையில் கல்கி ரூ.180 கோடி வசூல் செய்து சாதனை செய்துள்ளது.
ஆனால் அதே நேரத்தில் முதல் நாளில் அதிக வசூல் செய்து சாதனை செய்த திரைப்படம் ’ஆர்ஆர்ஆர்’ என்பதும் அந்த படம் முதல் நாளில் ரூ.223 கோடி வசூல் செய்தது என்பதும் அதேபோல் ’பாகுபலி 2’ முதல் நாளில் ரூ.217 கோடி வசூல் செய்தது என்பதும், இந்த இரண்டு படங்களின் சாதனையை கல்கி முறியடிக்க வில்லை என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களில் இந்த திரைப்படம் மிகப்பெரிய வசூலை செய்யும் என்று எதிர்பாக்கப்படுகிறது.
Listen News!