தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா ஆகியோர் இணைந்து நடித்துள்ள திரைப்படம் தான் பராசக்தி. அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே இப்படம் குறித்து ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. தற்போது அந்த எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் வகையில், படத்தின் முன்பதிவு தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பராசக்தியில் மூன்று வித்தியாசமான நடிப்பு பாணியைக் கொண்ட நடிகர்கள் ஒரே படத்தில் இணைந்திருப்பது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. சமூக கருத்துகளும், உணர்ச்சிகரமான கதையமைப்பும் கொண்ட படங்களை இயக்குவதில் பெயர் பெற்ற சுதா கொங்கரா, இந்த படத்திலும் அதே பாணியை பின்பற்றியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் முன்னணி நாயகியாக இருக்கும் ஸ்ரீலீலா, தமிழில் ஹீரோயினாக அறிமுகமாகியுள்ளார். அவரது அறிமுகமே இப்படத்திற்கு கூடுதல் கவனம் பெற்றுக் கொடுத்துள்ளது. இளம் ரசிகர்கள் மத்தியில் ஸ்ரீலீலாவுக்கு இருக்கும் வரவேற்பு, பராசக்தி படத்தின் ஓபனிங் வசூலுக்கு பெரும் பலமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
படத்திற்கு இசையமைத்துள்ளவர் ஜி.வி. பிரகாஷ் குமார். சமீபத்தில் வெளியான பராசக்தி படத்தின் டிரெய்லர், வெளியான 24 மணி நேரத்திலேயே 40 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்ததாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது.
தற்போது பராசக்தி படத்தின் முன்பதிவு தொடங்கியுள்ள நிலையில், இதுவரை உலகளவில் ரூ.50 லட்சம் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்னும் படத்தின் வெளியீட்டிற்கு நாட்கள் உள்ள நிலையில், இந்த முன்பதிவு வசூல் சினிமா வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. குறிப்பாக தமிழகம் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் ரசிகர்கள் முன்பதிவில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
Listen News!