நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணா (பாலய்யா) நடித்துள்ள மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமான ‘அகண்டா 2 : தாண்டவம்’ நேற்று திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமைந்திருந்தது.

முதல் பாகமான ‘அகண்டா’ பெற்ற மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, அதன் தொடர்ச்சியாக உருவான இந்த படம் வெளியான முதல் நாளிலேயே அமோக வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக பாலய்யாவின் ரசிகர்களிடையே படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
‘அகண்டா 2 : தாண்டவம்’ திரைப்படம் கடந்த வாரமே வெளியாக வேண்டியிருந்தது. ஆனால் சில தவிர்க்க முடியாத காரணங்களால் படம் திட்டமிட்ட தேதியில் வெளியாகவில்லை. இதனால் ரசிகர்கள் மத்தியில் சிறிய ஏமாற்றம் ஏற்பட்டாலும், படத்தின் மீது இருந்த எதிர்பார்ப்பு குறையவில்லை. இந்நிலையில், அனைத்து தடைகளையும் கடந்து படம் நேற்று, அதாவது டிசம்பர் 12ஆம் தேதி, உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியானது.

படம் வெளியான முதல் நாளிலேயே பல திரையரங்குகளில் ஹவுஸ் ஃபுல் காட்சிகள் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த திரைப்படத்தை பேயாபதி ஸ்ரீனு இயக்கியுள்ளார். படத்தில் பாலய்யாவுடன் சம்யுக்தா மேனன், ஆதி பினிஷெட்டி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சம்யுக்தா மேனனின் நடிப்பு கதைக்கு தேவையான வலுவை சேர்த்துள்ளதாகவும் ரசிகர்கள் கூறுகின்றனர்.
படம் வெளியான முதல் நாளிலேயே வசூலில் சாதனை படைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சாக் நிக் (Sacnilk) வலைத்தளத்தின் தகவலின்படி, ‘அகண்டா 2 : தாண்டவம்’ திரைப்படம் முதல் நாளில் இந்தியாவில் மட்டும் சுமார் 30 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் முதல் நாள் இரவு நடைபெற்ற பிரீமியர் ஷோக்களின் வசூலும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வசூல், பாலய்யாவின் முந்தைய படங்களின் முதல் நாள் வசூலை விட அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதன் மூலம், ‘அகண்டா 2: தாண்டவம்’ படம் வணிக ரீதியாகவும் நல்ல தொடக்கத்தை பெற்றுள்ளதாக திரை வட்டாரங்கள் கருத்து தெரிவிக்கின்றன. இந்நிலையில், படத்தின் அதிகாரபூர்வ வசூல் குறித்த தகவல்களை படக்குழு விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Listen News!