தமிழ் சினிமாவில் நடிகராக மட்டுமல்லாமல், தயாரிப்பாளராகவும் தனித்த அடையாளத்தை உருவாக்கி வருகிறார் சிவகார்த்திகேயன். அவரது தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் உருவாகி வரும் புதிய படமான ‘தாய் கிழவி’ தற்போது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
உணர்ச்சிபூர்வமான கதைக்களம், கிராமிய பின்னணி மற்றும் அனுபவமிக்க நடிகர்களின் நடிப்பு ஆகியவை இந்த படத்தின் முக்கிய அம்சங்களாக பார்க்கப்படுகின்றன.

‘தாய் கிழவி’ படத்தை அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ளார். இந்த படம், தமிழகத்தின் உசிலம்பட்டி அருகே உள்ள காடுபட்டி கிராமத்தை கதைக்களமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
75 வயது மூதாட்டி ஒருவரின் வாழ்க்கை, அவரைச் சுற்றியுள்ள குடும்ப உறவுகள், கிராமத்து வாழ்க்கையின் சுமை மற்றும் முதியவர்களின் உணர்வுகள், சமூக பார்வை எனப் பல விஷயங்களை மையமாக வைத்து இந்த கதை நகர்கிறது.
இந்த படத்தில் நடிகை ராதிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பல தசாப்தங்களாக தமிழ் சினிமாவில் தனது ஆழமான நடிப்பால் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த ராதிகா, இந்த படத்தில் ஒரு மூதாட்டியாக மாறி நடித்துள்ளார்.
‘தாய் கிழவி’ படத்திற்கு நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ளார். படத்தின் இசை, கதையின் உணர்வுகளை மேலும் ஆழமாக ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் என எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
அத்துடன், ‘தாய் கிழவி’ படம் அடுத்த மாதம் 20-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது. இந்த நிலையில், தற்போது படக்குழு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு ஒன்று ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதாவது, ‘தாய் கிழவி’ படத்தின் சாட்டிலைட் உரிமையை விஜய் டிவியும், டிஜிட்டல் உரிமையை ஜீயோ ஹாட்ஸ்டாரும் கைப்பற்றியுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Listen News!