தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த், நேற்று (டிசம்பர் 12) தனது 75வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடினார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு, ரசிகர்களுக்கு ஒரு சிறப்பு விருந்தாக அமைந்தது அவரது திரையுலக வாழ்க்கையில் மைல்கல்லாக கருதப்படும் ‘படையப்பா’ திரைப்படத்தின் ரீ-ரிலீஸ் தான்.

1999ஆம் ஆண்டு வெளியான இந்த படம், 26 ஆண்டுகளுக்குப் பிறகும் ரசிகர்களின் ஆதரவை அப்படியே தக்க வைத்திருப்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.
1999ம் ஆண்டு, இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான ‘படையப்பா’ திரைப்படம், ரஜினிகாந்தின் திரையுலக வாழ்க்கையில் மிக முக்கியமான படமாக அமைந்தது. இப்படத்தில் ரஜினியுடன் சௌந்தர்யா, ரம்யா கிருஷ்ணன், சிவாஜி கணேசன், மணிவண்ணன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

குறிப்பாக ரம்யா கிருஷ்ணனின் நீலாம்பரி கதாபாத்திரம் தமிழ் சினிமாவின் மறக்க முடியாத வில்லி கதாபாத்திரங்களில் ஒன்றாக இன்று வரை பேசப்படுகிறது. குடும்பம், மரியாதை, அதிகாரம், பழி வாங்கும் மனோபாவம் என பல அம்சங்களை உள்ளடக்கிய இந்த படம், வெளியான போது விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றியை பெற்றது.
படம் வெளியாகி 26 ஆண்டுகள் ஆன நிலையில், ரஜினிகாந்தின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு ‘படையப்பா’ திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. இந்த ரீ-ரிலீஸ் அறிவிப்பு வெளியான உடனே, ரசிகர்களிடையே பெரும் உற்சாகம் காணப்பட்டது.
ரீ-ரிலீஸாக இருந்தாலும் வசூலில் எந்தவித சமரசமும் இல்லை என்பதை ‘படையப்பா’ நிரூபித்துள்ளது. தற்பொழுது கிடைத்த தகவல்களின் அடிப்படையில், ‘படையப்பா’ திரைப்படம் முதல் நாளில் தமிழகத்தில் மட்டும் ரூ. 4.5 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இது ஒரு ரீ-ரிலீஸ் படத்திற்கு கிடைத்துள்ள மிகப்பெரிய வசூல் என திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Listen News!