சிவகார்த்திகேயன் நடிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள பராசக்தி திரைப்படம், வெளியான முதல் நாளிலிருந்தே கடும் விவாதங்களுக்கு மையமாகி வருகிறது.
கடந்த 10-ம் தேதி வெளியான இப்படம், வெளியீட்டுக்கு முன்பே மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

பராசக்தி திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியானதும், இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக, விஜய்யின் ‘ஜனநாயகன்’ ட்ரெய்லர் பெற்ற சாதனையை பராசக்தி ட்ரெய்லர் முறியடித்ததாக தகவல்கள் வெளியாகின. இதுவே, இரண்டு ரசிகர் கூட்டங்களுக்கிடையே விவாதங்களை அதிகரிக்கச் செய்தது.
இந்த நிலையில், படம் வெளியான பிறகு சமூக வலைத்தளங்களில் வந்த விமர்சனங்கள் வெறும் சினிமா விமர்சனத்தைத் தாண்டி, ரசிகர்களின் மோதலாக மாறியதாக கூறப்படுகிறது.
பராசக்தி வெளியான சில மணி நேரங்களிலேயே, டுவிட்டர், யூடியூப் போன்ற தளங்களில், படத்தை விமர்சிக்கும் பதிவுகள் வேகமாக பரவத் தொடங்கின.
இதன் தொடர்ச்சியாக, பராசக்தி படத்தின் க்ரியேட்டிவ் ப்ரொட்யூசர் தேவ் ராம்நாத், தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவு தற்போது சினிமா வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
வெளியிட்ட அந்த பதிவில், “உங்களுடன் சேர்ந்து ஒரு படத்தை வெளியிடுகிறோம் என்பதற்காகவே எங்களது படத்தை சிதைக்கும் உரிமை உங்களுக்கு இல்லை. முதலில் நாங்கள் தான் வெளியீட்டு தேதியை அறிவித்தோம். உங்கள் படத்தை தடுக்க நாங்கள் முயற்சித்தோமா? இல்லை.” என்று குறிப்பிட்டுள்ளார்.
“பிரச்னைகளை தீர்க்க சென்னை மற்றும் மும்பையில் தணிக்கை குழு அலுவலகத்திற்கு நான் ஒவ்வொரு நாளும் சென்றேன். உங்களது குழுவைப் போலவே நாங்களும் தணிக்கையில் பல பிரச்னைகளை எதிர்கொண்டோம். வெளியீட்டிற்கு வெறும் 18 மணி நேரத்திற்கு முன்பாகவே எங்கள் படத்திற்கு சான்று கிடைத்தது.” என்று அவர் தெரிவித்துள்ளார்.
அவரது பதிவின் முக்கியமான பகுதியாக, இணையத்தில் நடைபெறும் செயல்களைப் பற்றி கடுமையாக விமர்சித்துள்ளார். அதாவது, “எதிர்மறையான விமர்சனங்கள், பழைய வீடியோக்களை மீண்டும் பரப்புவது, மக்களிடையே எதிர்மறையான எண்ணத்தை உருவாக்குவது, திரையரங்குகளில் அரசியல் முழக்கங்களை எழுப்புவது..இதெல்லாம் போட்டியல்ல.” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த பதிவு, நேரடியாக யாரையும் பெயரிட்டு குறிப்பிடாதபோதிலும், விஜய் ரசிகர்களை மறைமுகமாக குற்றம் சாட்டுவதாக பலர் கருதி வருகின்றனர்.
Listen News!