கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் நடைபெற்ற நள்ளிரவில் அங்கு சென்ற முதல்வர் மு. க ஸ்டாலின் இறந்தவர்களின் குடும்பத்திற்கு அஞ்சலி செலுத்தி ஆறுதல் சொன்னார்.
இச்சம்பவத்தில் 39 பேர் உயிரிழந்து உள்ள நிலையில், தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் கைது செய்யப்படுவாரா? என்ற கேள்விக்கு முதல்வர் மு. க ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.
அதன்படி அவர் கூறுகையில், கனத்த இதயத்தோடும், மிகுந்த துயரத்தோடும் உங்கள் முன்னால் நின்று கொண்டு உள்ளேன். இந்த விபத்தை பற்றி விவரிக்க முடியாது. அந்த அளவுக்கு சோகமான சூழல் ஏற்பட்டுள்ளது.
சென்னையில் நான் இருக்கும் போது கரூரில் இப்படி ஒரு சம்பவம் நடந்ததாக எனக்கு செய்தி கிடைத்தது. நான் உடனே செந்தில் பாலாஜியை மருத்துவமனைக்கு சென்று பார்க்கச் சொன்னேன். ஆனால் அதன் பின்பு தொடர்ச்சியாக மரண செய்திகள் வந்தன. இதை நான் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. எனக்கு அச்சம் ஏற்பட்டது.
உடனே அங்கு உள்ள அமைச்சர்களை தொடர்பு கொண்டு கரூருக்கு போகுமாறு உத்தரவிட்டேன். அதேபோல காவல்துறை அதிகாரிகளையும் தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு பணித்தேன்.
இந்த சம்பவத்தில் இதுவரையில் 39 உயிர்களை இழந்துள்ளோம். அதில் ஆண்கள் 13 பேர், பெண்கள் 17, ஆண் குழந்தைகள் 4, பெண் குழந்தைகள் 5 பேர் என மொத்தமாக 39 உயிர்கள் பறிபோயுள்ளன. அரசியல் கட்சி நடத்திய கூட்டத்தில் இத்தனை உயிர்கள் பலியானது இதுவரை நடக்காததொன்று. இனிமேல் நடக்கவும் கூடாது.
இறந்தவர்களின் குடும்பத்திற்கு என்ன ஆறுதல் சொல்ல வேண்டும் என எனக்கு தெரியவில்லை. அவர்களுக்கு தலா 10 லட்சம் நிதி உதவியும், காயம் அடைந்து சிகிச்சை பெறுபவர்களுக்கு தலா ஒரு லட்சமும் வழங்கப்படும் என அறிவித்துள்ளேன்.
மேலும் விஜய் கைதாவாரா? என்ற கேள்விக்கு அரசியல் நோக்கத்தோடு எதையும் நான் சொல்ல விரும்பவில்லை. ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கை அடிப்படையில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பதிலளித்துள்ளார்.
Listen News!