மலையாள சினிமாவில் பல்வேறு கதாப்பாத்திரங்களில் நடித்து தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கியுள்ள நடிகர் உன்னி முகுந்தன் தற்போது மிகப்பெரிய சர்ச்சையில் சிக்கியுள்ளார். அவரது மேலாளரான விபின் குமார் அளித்த புகாரின் அடிப்படையில், தாக்குதல் மற்றும் கொலை மிரட்டல் குற்றச்சாட்டுகளின் கீழ் உன்னி முகுந்தன் மீது பொலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இவ்வழக்கு நடிகர் டோவினோ தாமஸின் ‘நரிவேட்டை’ திரைப்படம் தொடர்பான விவகாரத்தினால் தான் தற்பொழுது பெரிதாகியுள்ளது. அந்தப் படத்திற்கு சமூக வலைத்தளங்களில் நேர்மறையான விமர்சனம் எழுதியதற்காக, நடிகர் உன்னி முகுந்தன் தனது மேலாளராக இருந்த விபினைக் கடுமையாக திட்டியதாக விபின் சமீபத்தில் பொலீஸில் புகார் கொடுத்துள்ளார்.
இந்த புகாருக்குப் பிறகு அமைதியாக இருந்த உன்னி முகுந்தன், தற்போது சமூக வலைத்தளங்களில் தனது அதிகாரபூர்வ பதிலை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, "2018ம் ஆண்டு, நான் என்னுடைய சொந்த தயாரிப்பில் ஒரு திரைப்படத்தைத் தயாரிக்கத் திட்டமிட்டிருந்தேன். அப்போது தான் விபின் என்னை அணுகினார். அவர், தனது அனுபவங்களைப் பகிர்ந்து, எனது மேலாளராக பணியாற்ற விருப்பம் தெரிவித்தார். ஆனால், நானோ அவரை ஒருபோதும் அதிகாரபூர்வமாக எனது மேலாளராக நியமிக்கவில்லை. அத்துடன் நான் அவர் மீது எந்தத் தாக்குதலும் நடத்தவில்லை. இது பொய்யான குற்றச்சாட்டு." என்று கூறியிருந்தார்.
இது தொடர்பாக பொலீஸார் விசாரணையை தொடங்கியுள்ளனர். தெளிவான ஆதாரங்கள் இல்லாமல், ஒரு புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்துள்ளாரா? அல்லது உண்மையில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட ஏதேனும் மோதல் காரணமாகத் தான் இப்புகார் அளிக்கப்பட்டதா.? என்பது தற்போதைய கேள்வியாக அமைந்துள்ளது.
Listen News!