சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் ‘பராசக்தி’ திரைப்படம், ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. ஜனவரி 10ஆம் தேதி திரைக்கு வரவிருக்கும் இப்படம், வெளியீட்டுக்கு முன்பே பல சர்ச்சைகளையும் பேசுபொருள்களையும் சந்தித்து வருகிறது.

குறிப்பாக, சென்சார் குழு பல வசனங்களை மியூட் செய்ய அறிவுறுத்தியதால், படம் மீண்டும் மறு தணிக்கைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது ஒருபுறம் இருக்க, இப்படம் முதலில் சூர்யா நடிப்பில் உருவாக இருந்தது என்ற தகவல் மீண்டும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
இந்த நிலையில், தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், இயக்குநர் சுதா கொங்கரா, இப்படத்தின் பின்னணியை முதன்முறையாக விரிவாக பகிர்ந்துள்ளார். சூர்யா ஏன் இப்படத்திலிருந்து விலகினார், சிவகார்த்திகேயன் எப்படி இந்த படத்தில் இணைந்தார் என்பதற்கான உண்மை காரணங்களை அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

சுதா கொங்கரா கூறுகையில், “இந்தக் கதை கொரோனா காலத்தில் உருவானது. அப்போது நடிகர் சூர்யாவிடம் நான் முதலில் இந்த கதையை சொன்னேன். வெற்றிமாறனின் உதவி இயக்குநர் மதிமாறனும் நானும் நெருங்கிய நண்பர்கள். அந்த நேரத்தில் நிறைய கதைகள், ஐடியாக்கள் பற்றி பேசிக்கொண்டிருந்தோம். அப்போது இந்த கதை உருவானது. எனக்கு இது ரொம்ப பிடித்திருந்தது.” என்று நினைவுகூர்ந்தார்.
மேலும், “சூர்யா வெறும் நடிகர் அல்ல, எனக்கு நெருங்கிய நண்பர். அத்துடன், சூர்யாவிடம் தொடர்ச்சியாக ஷூட்டிங் கமிட்மெண்ட்ஸ் இருந்தது. அவர் ஏற்கனவே சில படங்களில் கையெழுத்து போட்டிருந்தார். அந்த படங்களின் ஷூட்டிங் தொடர்ந்து நடந்துகொண்டிருந்ததால், இந்த படத்திற்கு அவர் முழு நேரமாக தேதிகள் ஒதுக்க முடியவில்லை.

இதற்கிடையே சிவகார்த்திகேயனுக்கு கதை இருக்கிறதா என தயாரிப்பாளர் அருண் விஷ்வா கேட்டிருந்தார். அதனால் எந்த தயக்கமும் இல்லாமல் அவருக்கு உடனே ஃபோன் செய்து இந்த ஐடியாவை சொன்னேன். அவரும் கதையை கேட்டு ரொம்பவே ஆர்வமாகிவிட்டார். அந்த நேரத்தில் இந்த படம் அவரை மையமாக வைத்து தான் உருவாகும் என்ற நம்பிக்கையும் இருந்தது.” என்றார்.
முதலில் ‘புறநானூறு’ என்ற பெயரில் உருவாக இருந்த இந்த படம், பின்னர் பல காரணங்களால் ‘பராசக்தி’ என பெயர் மாற்றம் பெற்றது. இந்த தலைப்பே படத்தின் அரசியல், சமூக கருத்துகளை வெளிப்படுத்தும் வகையில் இருப்பதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில், இந்த பெயரே சென்சார் குழுவின் கவனத்தையும் ஈர்த்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சூர்யா – சுதா கொங்கரா கூட்டணியில் உருவாக வேண்டிய படம், சூழ்நிலைகளால் சிவகார்த்திகேயனிடம் சென்றாலும், அதனால் படத்தின் வலிமை குறையவில்லை என்பதே இயக்குநரின் நம்பிக்கை. முழு அர்ப்பணிப்புடன் இப்படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன், ‘பராசக்தி’ மூலம் தனது நடிப்பில் ஒரு புதிய பரிமாணத்தை காட்டுவார் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
Listen News!