தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர்களில் ஒருவராக பெயர் பெற்ற விக்ரமனின் மனைவி, குச்சிப்புடி நடனகலைஞர் திருமதி ஜெயப்பிரியா, தமிழக அரசின் 'கலைமாமணி' விருதை பெறும் பெருமையை பெற்றுள்ளார். பல ஆண்டுகளாக மேடைகளில் தனது நடனத்திறமையால் தமிழ் நாட்டின் கலாச்சாரத்தை உலகளவில் பரப்பிய அவரது பயணம் இன்று ஒரு முக்கியமான திருப்புமுனையை கண்டுள்ளது.
50 ஆண்டுகளாக 4000 மேடைகளுக்கு மேல் குச்சிப்புடி நடனமாடிய ஜெயப்பிரியா, தனது நெஞ்சை உருக்கும் நன்றியை தெரிவித்துள்ளார். "நான் 3 வயதில் இருந்து நடனம் ஆடி வந்தவள். கடந்த 8 ஆண்டுகளாக ஒரே அறையில் முடங்கியபடியே இருந்த எனக்கு இந்த கலைமாமணி விருது வழங்கிய தமிழ்நாடு அரசுக்கு என் இதயபூர்வமான நன்றி," என கண்களில் கண்ணீருடன் கூறியுள்ளார்.
ஒரு சிறந்த நடன கலைஞராக வலம்வந்த ஜெயப்பிரியா, நாட்டிய உலகில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கியவர். பாரம்பரிய குச்சிப்புடி நடனத்தில் ஆழ்ந்த பயிற்சி பெற்று, நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு பயிற்சி அளித்ததோடு, நாட்டின் பல்வேறு மாநிலங்களில் உள்ள நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்.
ஆனால், வாழ்க்கையின் ஒரு திருப்பமாக 8 வருடங்களுக்கு முன், அவரது முதுகில் ஏற்பட்ட கட்டியை நீக்க சிகிச்சை செய்யப்பட்டது. அந்த அறுவை சிகிச்சை தவறாக முடிந்ததால், இடுப்பிற்குக் கீழ் செயலிழந்து, அன்றிலிருந்து இன்றுவரை படுக்கையிலேயே இருக்கிறார் ஜெயப்பிரியா. நடனமே வாழ்வாகக் கொண்டவருக்கு, இதைவிட பெரிய துன்பம் வேறெது?
இந்த நிலைமையில் இருந்தபோதும், மனதை நிலைநாட்டி வாழ்ந்து வருகின்றார் ஜெயப்பிரியா. அத்தகைய கலைஞருக்கு தமிழ்நாடு அரசு 'கலைமாமணி' விருது வாங்கியதென்பது மிகப்பெரிய அங்கீகாரமாகவே பார்க்கப்படுகிறது.
Listen News!