• Dec 29 2025

உன் எளிமைக்கு நானும் ரசிகன்.. சசிகுமாரை கடிதம் மூலம் பாராட்டிய இயக்குநர் பாலா.!

subiththira / 6 days ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் ஆண்டுதோறும் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக நடைபெறும் சென்னை சர்வதேச திரைப்பட விழா (CIFF), இந்த ஆண்டு தனது 23வது பதிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. வழக்கம் போல டிசம்பர் மாதத்தில் நடைபெறும் இந்த விழா, கடந்த 11ம் தேதி தொடங்கி 19ம் தேதி வரை நடைபெற்றது.


23வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில், ஜெர்மனி, ரஷ்யா, ஸ்பெயின், பிரான்ஸ், தாய்வான் உள்ளிட்ட 51 நாடுகளைச் சேர்ந்த 122 திரைப்படங்கள் திரையிடப்பட்டன. உலகின் பல்வேறு கலாச்சாரங்களையும், சினிமா மொழிகளையும் ஒரே மேடையில் காணும் வாய்ப்பை இந்த விழா வழங்கியது.

சர்வதேச படங்களுடன் சேர்த்து, 12 தமிழ் திரைப்படங்கள் இந்த விழாவில் திரையிடப்பட்டன. அவற்றில் அலங்கு, பிடிமண், மாமன், மருதம், பறந்து போ, வேம்பு, டூரிஸ்டு பேமிலி, பாட்ஷா, 3BHK உள்ளிட்ட படங்கள் அடங்கும். குறிப்பாக, டூரிஸ்டு பேமிலி திரைப்படம் பார்வையாளர்கள் மற்றும் விமர்சகர்களிடையே நல்ல கவனத்தை பெற்றது.


இந்த விழாவின் முக்கிய தருணமாக, ‘டூரிஸ்டு பேமிலி’ திரைப்படத்தில் நடித்ததற்காக நடிகர் சசிகுமாருக்கு சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டது. தமிழ் சினிமாவில் இயக்குநராகவும், நடிகராகவும் தனித்த பாதையை உருவாக்கிய சசிகுமார், இந்த விருது மூலம் தனது நடிப்பு பயணத்தில் இன்னொரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளார்.

இந்த விருதைத் தொடர்ந்து, பிரபல இயக்குநர் பாலா, நடிகர் சசிகுமாரை பாராட்டி உருக்கமான வாழ்த்து கடிதத்தை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், சசிகுமாரின் எளிமை, இயல்புத்தன்மை மற்றும் நடிகராக அவர் அடையும் வெற்றிகள் குறித்து பாலா மனம் திறந்து பேசியுள்ளார்.


பாலா தனது கடிதத்தில், “உன் இயல்பான எளிமைக்கு இருக்கும் பல ரசிகர்களில் நானும் ஒருவன். நடிகனாக நீ பெறும் வெற்றிகள் எனக்குள் ஏற்படுத்தும் மகிழ்ச்சியை வார்த்தைகளால் விவரிக்க இயலவில்லை.

உனக்குள் உறுமிக்கொண்டிருக்கும் அந்த ‘சம்பவகாரன்’ சசியை, என் இனிய இயக்குநனை, ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். என்னுடைய இந்த ஆசையை நீ விரைவில் நிவர்த்தி செய்வாய் என்று வேண்டுகிறேன்.” என்று தெரிவித்துள்ளார். இந்த வார்த்தைகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

Advertisement

Advertisement