தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரும், ‘புஷ்பா’ திரைப்படத்தின் மூலம் நாடு முழுவதும் ரசிகர்களை பெற்றவருமான அல்லு அர்ஜூனின் பெயர் தற்போது ஒரு பரபரப்பான வழக்கில் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ளது.

புஷ்பா 2 திரைப்படத்தின் சிறப்பு காட்சியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ஹைதராபாத் பொலிஸார் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில், மொத்தம் 23 பேரின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதில் நடிகர் அல்லு அர்ஜூனின் பெயரும் இடம்பெற்றிருப்பது திரையுலகிலும் ரசிகர்களிடமும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புஷ்பா 2 திரைப்படம் அதிகாரபூர்வமாக வெளியாவதற்கு முன்னதாக, கடந்த ஆண்டு டிசம்பர் 4ஆம் தேதி ஹைதராபாத் நகரின் சிக்கடபள்ளி பகுதியில் அமைந்துள்ள சந்தியா தியேட்டரில் இந்த திரைப்படத்தின் சிறப்பு காட்சி நடத்தப்பட்டது.
இந்த காட்சியை நேரில் காண நடிகர் அல்லு அர்ஜூன் திடீரென வருகை கொடுத்ததை அடுத்து, ஆயிரக்கணக்கான ரசிகர்கள் தியேட்டர் முன்பு கூடினர்.

அல்லு அர்ஜூனை நேரில் காண வேண்டும் என்ற ஆவலில் ரசிகர்கள் பெருமளவில் திரண்டதால், தியேட்டர் வளாகத்தில் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. பாதுகாப்பு ஏற்பாடுகள் போதுமான அளவில் இல்லாததாலும், ரசிகர்கள் கட்டுப்பாடின்றி முன்னேற முயன்றதாலும் நிலைமை மோசமடைந்தது. அந்த நேரத்தில் ஏற்பட்ட நெரிசலில் பெண் ஒருவர் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. பல மாதங்கள் நீடித்த விசாரணைக்கு பிறகு, தற்போது பொலிஸார் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனர். இந்த குற்றப் பத்திரிகையில் மொத்தம் 23 பேரின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Listen News!