உயர்தர குணச்சித்திரங்களை மையமாகக் கொண்டு உருவாகும் “பல்டி” திரைப்படம், செப்டம்பர் 26 ஆம் தேதி தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரு மொழிகளில் வெளியாக இருக்கிறது. தயாரிப்பாளர்கள் சாந்தோஷ் T. குருவில்லா மற்றும் பினு ஜார்ஜ் அலெக்சாண்டர் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளனர். இப்படத்தின் மூலம் உன்னி சிவலிங்கம் இயக்குநராக அறிமுகமாகிறார்.
சென்னையில் நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் படக்குழுவினர் பங்கேற்று, படத்தின் பயணம் குறித்து பகிர்ந்துகொண்டனர். இயக்குனர் உன்னி சிவலிங்கம் பேசும்போது, “இது எனது முதல் பத்திரிகையாளர் சந்திப்பு. நான் மலையாளி என்றாலும், தமிழ்நாட்டில் இப்படி சந்திப்பு நடத்துவது மிகவும் சந்தோஷமான அனுபவம். இப்படம் சுமார் 60% மலையாளம், 40% தமிழ் கலவையில் உருவாகியுள்ளது. விளையாட்டுத்துறையை மையமாக கொண்டு, அதில் உள்ள ஸ்பிரிட்டுடன் ஒரு திரைக்கதை உருவாக்கும் ஆசை இருந்தது. அதை “பல்டி” மூலம் நிறைவேற்றியிருக்கிறேன். இசையமைப்பாளர் சாய் அபயங்கரை ‘கச்சிசேரா’ ஆல்பத்தின் மூலம் கவனித்தேன். அவரது இசை இந்தப் படத்திற்கு பெரிதும் ஒத்துப்போனது” என்றார்.
நடிகர் சாந்தனு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். “பல்டி ஒரு நால்வரைக் கொண்ட கதை. ஷேனை மட்டுமல்லாமல், எனக்கும் இப்படத்தில் சிறந்த கதாபாத்திரம் வழங்கியமைக்கு நன்றி. மலையாளத்தில் இது எனக்கு ரீஎண்ட்ரி போன்றது. ஷேனிடம் நிறைய கற்றுக் கொண்டேன். திருவிழா காட்சிகளில் அவர் காட்டிய நடிப்பு பசுமை. நாமும் அப்படி இருக்கவேண்டுமென்ற கற்றல் எனக்கே கிடைத்தது,” என்றார் அவர்.
படத்தின் நாயகனாக நடித்துள்ள ஷேன் நிகம், “பல்டி ஒரு ஸ்போர்ட்ஸ் ஆக்ஷன் டிராமா. நானும் என் நண்பர்கள் மூன்று பேரும் சேர்ந்த கபடி அணியை உருவாக்குகிறோம். வில்லன் வரும் போது ஏற்படும் சவால்களே படத்தின் மையக் கரு. இயக்குனர் உன்னிக்கு, தயாரிப்பாளர்களான பினு சேட்டா மற்றும் சந்தோஷ் சேட்டாவிற்கு நன்றி. சாந்தனுவிடம் இருந்தும் நிறைய கற்றுக் கொண்டேன். இசையமைப்பாளர் சாய் இந்த படத்திற்கு அருமையாக இசையமைத்திருக்கிறார்,” எனப் பேசினார்.
நடிகை ப்ரீதி, இந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். மற்ற நடிகர்கள், தொழில்நுட்பக் குழுவினரும் பட விழாவில் பங்கேற்றனர். “பல்டி” படம் விளையாட்டு, நட்பு, போராட்டம் மற்றும் உணர்வுகளை மையமாக கொண்டு உருவாகியிருப்பதாகவும், அனைத்து தரப்பினரையும் எட்டும் திரைப்படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Listen News!