பாகிஸ்தானுக்கு தெரியாமல் உள்ள போய் அடித்து விட்டு வரும் திறமை நம்மிடம் இருக்கிறது, ஆனால் ஒரு சின்ன விஷயத்தை நம்மால் தடுக்க முடியவில்லை என்று பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆரி சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசி உள்ளார்.
தமிழகத்தில் நாளை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது என்பது சர்வ சாதாரணமாக நடந்து வருகிறது. கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளும் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வருகிறார்கள் என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.
என்னதான் தேர்தல் ஆணையம், பறக்கும் படைகள் தீவிரமாக சோதனை செய்தாலும் பல்வேறு முறைகளில் வாக்காளர்களுக்கு பணத்தை கொண்டு செல்வதில் அரசியல்வாதிகள் கைதேர்ந்தவர்களாக உள்ளனர். இது குறித்து பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆரி சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது ’பாகிஸ்தானுக்கு போய் அவர்களுக்கே தெரியாமல் அடித்து விட்டு வந்து விடக்கூடிய அளவுக்கு நம்மிடம் திறமை இருக்கிறது, ஆனால் அரசியல்வாதிகள் காசு கொடுப்பதை நம்மால் தடுக்க முடியவில்லை.
ஒரு நண்பரிடம் நான் பேசிக் கொண்டிருக்கும் போது யார் யாரெல்லாம் தேர்தலில் நிற்கிறார்களோ, அவர்கள் வங்கி கணக்கை முடக்கி விட வேண்டும், ஒரு தேர்தலுக்கு எவ்வளவு செலவு செய்ய முடியுமோ அந்த பணத்தை மட்டுமே எடுக்க அனுமதித்து விட்டு மீதி பணத்தை முடக்க வேண்டும் என்று ஒரு ஐடியா கொடுத்தோம். தேர்தல் முடிந்தவுடன் வங்கி கணக்கை ரிலீஸ் செய்துவிடலாம், இது நகைச்சுவையாக இருந்தாலும் யோசிக்க வேண்டியது’ என்று ஆரி கூறினார்.
அரசியல்வாதிகள் எவ்வளவு பணத்தை வேண்டுமானாலும் கொண்டு போய் மக்களிடம் கொடுத்து விடுகிறார்கள், ஆனால் சாதாரண நடுத்தர மக்கள் ஒரு 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் எடுத்துச் சென்றால் கூட அவர்களிடம் தேர்தல் ஆணையம் கெடுபிடி காட்டுகிறது, ரொம்ப சிரமமாக இருக்கிறது’ என்று தெரிவித்தார். மேலும் இதுபோல் நிறைய பிரச்சனைகள் இருக்கிறது, சின்ன சின்ன மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலம் இதையெல்லாம் சரி செய்ய முடியும் என்று ஆரி பேசினார். ஆரி பேசிய விஷயத்தை தேர்தல் ஆணையம் கவனத்தில் கொள்ளுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Listen News!