தனுஷ் நடித்து இயக்கும் ’ராயன்’ திரைப்படம் ஜூலை 26 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த இரண்டு மாதத்தில் தனுஷின் இன்னொரு படம் வெளியாக இருப்பதாகவும், அதனை அடுத்து மீண்டும் இரண்டு மாதத்தில் இன்னொரு படம் ரிலீஸ் ஆகும் என்றும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தனுஷின் 50வது திரைப்படமான ’ராயன்’ திரைப்படத்தில் அவர் முக்கிய வேடத்தில் நடித்து இயக்கியுள்ளார் என்பதும் இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் ஜூலை 26 ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆகும் என நேற்று தனுஷ் தனது சமூக வலைத்தளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் என்பதையும் பார்த்தோம்.
இந்த நிலையில் தனுஷ் இயக்கத்தில் உருவாகி வரும் இன்னொரு திரைப்படமான ’நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாகவும் இந்த படத்தின் தொழில்நுட்ப பணியையும் அவர் தொடங்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தை பார்த்த இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் ஆச்சரியம் அடைந்ததாகவும் இதனை அடுத்து பின்னணி இசை பணியை அவர் தொடங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த படம் நவீன கால ரொமான்ஸ் மற்றும் காமெடி படமாக அமையும் என்றும் 2கே கிட்ஸ் காதலை காமெடியாக சொல்லும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. தனுஷின் உறவினர் ஹீரோவாகவும், அனிகா சுரேந்திரன் நாயகியாகவும் இந்த படத்தில் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்திற்காக நான்கு பாடல்களை ஜிவி பிரகாஷ் கம்போஸ் செய்துள்ள நிலையில் தனுஷ் தான் அந்த நான்கு பாடல்களை எழுதி உள்ளதாகவும் தெரிகிறது.
இந்த நிலையில் ’நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படம் வெளியாகி அடுத்த இரண்டு மாதங்களில் அவரது குபேரன் படம் ரிலீஸ் ஆகும் என்றும் இந்த படமும் இந்த ஆண்டுக்குள் வெளியாகும் என்றும் கூறப்படுவதால், தனுஷ் ரசிகர்களுக்கு இந்த ஆண்டு அடுத்தடுத்த விருந்துகள் காத்திருக்கிறது என்பது உறுதியாகியுள்ளது.
Listen News!