யோகி பாபு நடிப்பில், சிம்புதேவன் இயக்கத்தில் உருவான ’போட்’ திரைப்படம் நேற்று வெளியாகியுள்ள நிலையில் இந்த படத்தின் விமர்சனத்தை பார்ப்போம்.
சுதந்திரத்திற்கு முன் சென்னை நகரத்தின் மீது ஜப்பான் போர் விமானங்கள் மூலம் குண்டு வீச போவதாக செய்தி வெளியான நிலையில் இந்த செய்தியால் சென்னை மாகாண மக்கள் மற்றும் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் கதி கலங்கி இருக்கின்றனர்.
இந்த நிலையில் பிரிட்டிஷ் அரசால் கைது செய்யப்பட்ட தனது தம்பியை அழைத்துச் செல்ல யோகி பாபு தனது பாட்டியுடன் காவல் நிலையத்திற்கு சென்ற போது அங்கே அவர் அவமானப்படுத்தப்படுகிறார். தங்கைக்கு திருமணம் என்பதால் தம்பியை அழைத்துச் செல்ல வேண்டும் என்று யோகி பாபு காவல்துறையிடம் கூறும் நிலையில் தான் போர் விமானங்கள் சென்னையை தாக்குகின்றன.
இதனை அடுத்து யோகி பாபு மற்றும் அவரது பாட்டி, ஜப்பான் வீசும் குண்டுகளிலிருந்து தப்பிக்க நடுக்கடலுக்கு செல்ல முடிவு செய்கின்றனர். அப்போது அவர்களுடன் சின்னி ஜெயந்த், கௌரி கிஷான், மதுமிதா, எம் எஸ் பாஸ்கர் உள்பட ஒரு சிலர் படகில் ஏறுகிறார்கள். அந்த படகு பயணத்தில் என்னென்ன பிரச்சனைகள் வருகிறது? படகில் இருந்தவர்கள் எப்படி சமாளிக்கிறார்கள்? தன்னுடைய தங்கை கல்யாணத்திற்கு தம்பியை யோகி பாபு அழைத்துச் சென்றாரா? போன்ற கேள்விகளுக்கு பதில் தான் சிம்பு தேவனின் ’போட்’ திரைப்படம்.
யோகி பாபுவின் வழக்கமான காமெடியில் சில இடங்களில் மட்டும் சிரிக்க வைக்கிறார். எமோஷனல் காட்சியில் கூட யோகி பாபு தனது நடிப்பை வெளிப்படுத்தி கதாநாயகனாகவும் தேறி விட்டார் என்பதை இந்த படம் காட்டுகிறது. எம் எஸ் பாஸ்கர் வழக்கம்போல் தனது அனுபவ நடிப்பையும் முதிர்ச்சியான உணர்ச்சிகளையும் வெளிப்படுத்துகிறார். ஒன்லைனில் சமூக கருத்துக்களை நக்கலாக கூறுவது சூப்பர். பிரிட்டிஷ் அதிகாரியாக நடித்தவர், காதல் கனவுகள் இருக்கும் கெளரி கிஷான், மற்றும் மதுமிதா, சாம்ஸ், சின்னி ஜெயந்த கேரக்டர்கள் குறித்து ஆழமாக சொல்லப்படவில்லை.
மொத்தத்தில் ஒரு ஆழமான கடலில் படகில் செல்லும் 10 மனிதர்களின் நிலை என்ன என்பதை சுவாரசியமாக கேமராவில் படமாக்கி இருந்தாலும் திரைக்கதை தான் இந்த படத்திற்கு மிகப்பெரிய தடையாக உள்ளது. ஒரு சில இடங்களில் திரைக்கதை ரசிக்க வைத்தாலும் இரண்டாம் பாதியில் மிகவும் சோர்வாக உள்ளது என்பதும் ஜிப்ரானின் பின்னணி இசை சில காட்சிகளில் மெருகேற்ற உதவி இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
1940களில் உள்ள சென்னை மக்களின் நிலைமை, பிரிட்டிஷ் ஆட்சியில் இருக்கும் சாதிக் கொடுமை, ஜாதி பாகுபாடுகள், அரசியல் ரீதியான காட்சிகள், அந்த காலத்தில் இருந்த நீதிகட்சி, காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் நிலைப்பாடுகள், இரண்டாம் உலகப்போருக்கு பின் உள்ள அரசியல், நேதாஜியின் படை, மகாத்மா காந்தியின் படுகொலை என பல விஷயங்களை நறுக்கான வசனங்களில் கேரக்டர்கள் மூலம் பேசவைத்து இயக்குனர் சிந்திக்க வைத்துள்ளார்.
இருந்தாலும் படம் ஒரு மேடை நாடகத்தை பார்ப்பது போன்ற உணர்வு அளிக்கிறது என்பதும் ஒரு சினிமாவை பார்ப்பது போன்ற உணர்வு பல இடங்களில் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நடுக்கடலில் படகு மட்டுமல்ல திரைக்கதையும் தத்தளித்து கொண்டிருப்பதால் பெரும்பாலான காட்சிகள் அயற்சியை தருகின்றன. ஆனால் அதே நேரத்தில் கிளைமேக்ஸில் ஒருசில கேரக்டர்கள் எடுக்கும் முடிவுகள் ஆச்சரியத்தை தருகிறது என்பதால் சிம்பு தேவனுக்கு தாராளமாக பாராட்டலாம்.
Listen News!