சினிமாவின் முதல் திருநங்கை இயக்குநர் சம்யுக்தா விஜயன் இயக்கி நடித்திருக்கும் திரைப்படம் நீல நிறச் சூரியன். ஆணாக இருந்து பெண்ணாக மாறுபவரின் வாழ்க்கை குறித்து இப்படம் உருவாகியுள்ளது. பல திரைவிழாக்களில் பங்கேற்று வரவேற்பைப் பெற்ற இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. இதில் இடம்பெற்ற காட்சிகளில் பாலின மாற்றம் அடைந்தவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களும் பிரச்னைகளும் கவனம் பெற்றுள்ளன.
இப்படம் அக்.4 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. திருநங்கை என்றால், “ஆணாகப் பிறந்து, திமிரெடுத்து பெண்ணாக தோற்றம் கொள்ள விரும்புகிறவர்கள்” என்கிற எண்ணமே பலருக்கும் இருக்கிறது. இது உண்மையல்ல; ஆண், பெண் போல இயற்கையான பாலினம்தாம் அவர்கள். அவர்களைப் புரிந்துகொள்ளாதது, பிறரது அறியாமையே.
இதையும், திருநங்கைகளின் வலியையும் அற்புதமாக சொல்லி இருக்கிறது, ‘நீல நிறச் சூரியன்’ திரைப்படம். பள்ளி ஆசிரியரான அரவிந்த், தான் ஒரு திருநங்கை என்பதை உணர்கிறார். பெண்களைப் போல தன்னை வெளிப்படுத்திக்கொள்ள விரும்புகிறார். ஆனால் பெற்றோர், ஊரார் என்ன சொல்வார்களோ என தயங்குகிறார்.
ஒரு கட்டத்தில் அந்தத் தயக்கத்தை உடைத்து, தனது பெண்மையை வெளிப்படுத்தும் விதமாக பெண்ணாகவே தோற்றம் காட்டுகிறார். அதாவது ஆண்களுக்கான உடையைத் தவிர்த்து, சேலை கட்டி பள்ளிக்கு வருகிறார்.அதன் பிறகு பள்ளி மாணவர்கள், சக ஆசிரியர்கள்,குடும்பத்தினரின் எதிர்ப்புக்கு ஆளாகிறார்.
இந்தத் தடைகளை எல்லாம் அவர் எப்படி எதிர்கொண்டார் என்பதே கதை. படத்தை இயக்கி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார் சம்யுக்தா விஜயன். மிக இயல்பாக நடித்து உள்ளார். தன்னை பிறர் புரிந்துகொள்ளாத நிலையில் குமைந்து நிற்பது, பெண் உணர்வில் மூழ்கிய அவர் தனக்கானவராக ஒருவரை நெருங்க அவரோ இவரை உடல் ரீதியாக மட்டும் அடைய நினைக்க இவர் கலங்கி நிற்பது இப்படி பல காட்சிகளைச் சொல்லலாம் இவரது அபார நடிப்புக்கு.
திருநங்கை, திருநர் உருவாவது என்பதெல்லாம் ஆண், பெண் போல இயற்கையான நிகழ்வே. இதை அதி அற்புதமாக சொல்லும் திரைப்படம் இது. அவர்களது உணர்வுகளை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும் என்பதை படம் உணர்த்துகிறது. தற்போது இந்த திரைப்படம் தொடர்பாக ரசிகர்களிடத்தில் நல்ல விமர்சனங்களும் வந்தவண்ணம் உள்ளன.
Listen News!