மலையாள திரையுலகில் சிறந்த நட்பைப் பகிர்ந்து வரும் நடிகர் மோகன்லால் மற்றும் மம்முட்டி, மீண்டும் ஒரு முறை அந்த உறவை அனைவருக்கும் வெளிப்படுத்தியுள்ளனர். உலகமெங்கும் உள்ள மம்முட்டி ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் வகையில், மோகன்லால் சபரிமலைக்குச் சென்று மம்முட்டிக்காக இருமுடி கட்டித் தரிசனம் செய்துள்ளார்.
மேலும் மோகன்லால், மம்முட்டியின் இயற்பெயரான 'முகமது குட்டி' என்ற பெயரில் சபரிமலையில் அர்ச்சனை செய்தும் வழிபட்டுள்ளார். இது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. தென்னிந்திய திரையுலகின் மிகப்பெரிய நட்சத்திரங்களில் ஒருவராக விளங்கும் மோகன்லால், தீவிர ஐயப்பன் பக்தராகக் கருதப்படுகின்றார். ஆண்டு தோறும் சபரிமலைக்குச் சென்று தரிசனம் செய்யும் வழக்கம் உள்ளவர்.
மோகன்லால், தனது நண்பருக்காக சபரிமலையில் வழிபாடுகளை மேற்கொண்ட தகவல் மலையாள திரை உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது. பல வருடங்களாக, மம்முட்டியும், மோகன்லாலும் இணைந்து திரைப்படங்களில் நடித்து வந்தாலும், அவர்களின் நட்பை பற்றி ரசிகர்கள் சிலர், "இவர்களுக்குள் போட்டி அதிகம்" எனக் கூறியிருந்தனர். ஆனால், மோகன்லால் தனது செயலால் எல்லா வதந்திகளையும் நிராகரித்துவிட்டார். அத்துடன் இந்தச் செய்தியைக் கேட்ட மம்முட்டி மிகுந்த மகிழ்ச்சியுடன் மோகன்லாலைப் பாராட்டியதாகக் கூறப்படுகின்றது.
Listen News!