• Jul 27 2026

கை காயம் காரணமாக ராம் சரணுக்கு அறுவை சிகிச்சை... கோவையில் அனுமதி!

Aathira / 1 hour ago

Advertisement

Listen News!

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ராம் சரண், சமீபத்தில் வெளியான 'பெத்தி' திரைப்படத்தின் சண்டைக் காட்சியில் ஏற்பட்ட காயம் காரணமாக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்படுகிறார்.

இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில் உருவான 'பெத்தி' திரைப்படத்தில் ராம் சரணுடன் ஜான்வி கபூர், சிவ ராஜ்குமார், மிர்சாபூர் புகழ் திவ்யேந்து, ஜெகபதி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விளையாட்டை மையமாகக் கொண்டு மிகப் பிரமாண்டமான பொருட்செலவில் உருவான இந்த திரைப்படம் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றது.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது இடம்பெற்ற சண்டைக் காட்சியில் நடித்தபோது, ராம் சரணின் கை மணிக்கட்டு பகுதியில் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஆரம்பத்தில் அந்தக் காயத்திற்கு சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தாலும், தொடர்ந்து வலி நீடித்ததால் மேலதிக மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

மருத்துவர்கள் மேற்கொண்ட பரிசோதனையில், கை மணிக்கட்டு பகுதியில் அறுவை சிகிச்சை அவசியம் என அறிவுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


இதனைத் தொடர்ந்து, கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக ராம் சரண் தனியார் விமானம் மூலம் கோவை வந்துள்ளார். அவருடன் அவரது தந்தையும் தெலுங்கு திரையுலகின் மூத்த நடிகருமான சிரஞ்சீவியும் வந்திருந்ததாக கூறப்படுகிறது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ராம் சரணுக்கு இன்று (திங்கட்கிழமை) கை மணிக்கட்டு பகுதியில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளது.

அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நிறைவடைந்த பின்னர், மருத்துவர்களின் ஆலோசனைப்படி அவர் சில நாட்கள் முழுமையான ஓய்வில் இருக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ராம் சரண் விரைவில் குணமடைந்து மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொள்ள வேண்டும் என ரசிகர்களும் திரையுலக பிரபலங்களும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement