கெளதம் ராம் கார்த்திக் நடிப்பில் உருவாகியுள்ள ‘ப்ளடி பாலிடிக்ஸ்’ படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
“எல்லாம் தெரிஞ்சவன் தலைவன் ஆகுறது அந்தக் காலம்.. எல்லாருக்கும் தெரிஞ்சவன் தலைவராகுறது தான் இந்த காலம்...” என்ற வசனத்துடன் தொடங்கும் இந்த டீசர், அரசியல் பின்னணியில் உருவாகியுள்ள படத்தின் கதைக்களத்தை வெளிப்படுத்துகிறது.

நவரச நாயகன் கார்த்திக்கின் மகனான கெளதம் கார்த்திக், மணிரத்னம் இயக்கிய ‘கடல்’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து பல்வேறு கதைக்களங்களில் நடித்துள்ள அவர், தற்போது தனது பெயரை கெளதம் ராம் கார்த்திக் என மாற்றிக்கொண்டுள்ளார்.
இந்நிலையில், இயக்குநர் தீனா ராகவன் இயக்கத்தில் ‘ப்ளடி பாலிடிக்ஸ்’ திரைப்படத்தில் அவர் கதையின் நாயகனாக நடித்துள்ளார். இப்படத்தில் செல்வராகவன் முக்கியமான அரசியல் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ‘சந்திரமுகி’ உள்ளிட்ட படங்களை இயக்கிய பி.வாசுவும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
அடிமட்ட தொண்டனாக இருக்கும் ஒருவர் அரசியலில் படிப்படியாக முன்னேறி தலைவனாக மாறுவதற்காக மேற்கொள்ளும் போராட்டங்களை மையமாக வைத்து இப்படத்தின் கதை உருவாகியுள்ளதாக டீசர் மூலம் தெரிகிறது. அரசியல், ஆக்ஷன் மற்றும் எமோஷன் கலந்த காட்சிகள் டீசரில் இடம்பெற்றுள்ளன.
தொடர்ந்து வெற்றிக்காக காத்திருக்கும் கெளதம் ராம் கார்த்திக்கிற்கு ‘ப்ளடி பாலிடிக்ஸ்’ திரைப்படம் திருப்புமுனையாக அமையுமா என்ற எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்கள் மத்தியில் உருவாகியுள்ளது.
Listen News!