• Jul 27 2026

4 நாட்களில் ரூ.217 கோடியை கடந்த ‘ஜனநாயகன்’... விஜய்யின் கடைசி படம் வசூலில் புதிய சாதனை!

Aathira / 1 hour ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக பல ஆண்டுகளாக ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த நடிகர் விஜய், தற்போது அரசியலில் முழு கவனம் செலுத்தி தமிழக முதல்-அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். இதனால், அவர் நடிப்பில் வெளியான ‘ஜனநாயகன்’ திரைப்படம், அவரது திரைப்பயணத்தின் கடைசி படமாக ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படம், கடந்த 23ஆம் திகதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியானது.

படம் வெளியாகும் முன்பே பல்வேறு சவால்களை சந்தித்த நிலையில், வெளியான பின்னரும் எதிர்பாராத பிரச்சினைகள் ஏற்பட்டன. குறிப்பாக, திரைப்படம் திரையரங்குகளில் வெளியான சில மணி நேரங்களிலேயே சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியானதாக தகவல்கள் வெளியாகின.


எனினும், விஜய்யின் கடைசி திரைப்படம் என்ற உணர்வும், அவரது ரசிகர்களின் மிகப்பெரிய ஆதரவும் காரணமாக, ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை காண ரசிகர்கள் திரையரங்குகளை நோக்கி பெருமளவில் சென்றனர்.

தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல பகுதிகளிலும், வெளிநாடுகளிலும் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியான முதல் நாளிலேயே இப்படம் ரூ.80 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியதாக கூறப்பட்டது.

இந்நிலையில், திரைப்படம் வெளியான முதல் 4 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.217.48 கோடி வசூலை குவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வார இறுதி விடுமுறை நாட்களில் கிடைத்த வரவேற்பு மற்றும் ரசிகர்களின் தொடர்ச்சியான ஆதரவு காரணமாக, வரும் நாட்களில் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என திரையுலக வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன.

விஜய்யின் சினிமா பயணத்தின் நிறைவு படமாக பார்க்கப்படும் ‘ஜனநாயகன்’, வசூல் ரீதியாகவும் ரசிகர்களின் வரவேற்பிலும் தொடர்ந்து கவனம் பெற்றுவருகிறது

Advertisement

Advertisement