தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் லண்டன் பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதல்-அமைச்சர் விஜய், பிரபல நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தய நிகழ்விலும் கலந்துகொண்டுள்ளார்.
கடந்த 10ஆம் திகதி இரவு சென்னையில் இருந்து லண்டனுக்கு புறப்பட்டுச் சென்ற விஜய், மறுநாள் அங்கு சென்றடைந்தார். அவரது லண்டன் பயணத்தின் ஒரு பகுதியாக, புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார் பந்தய திடலில் நடைபெற்ற கார் பந்தய நிகழ்விலும் அவர் கலந்துகொண்டார்.
அங்கு அஜித் குமார் பங்கேற்ற மிச்செலின் லீ மான்ஸ் கோப்பை கார் பந்தயத்தை, விஜய் பச்சைக் கொடியசைத்து ஆரம்பித்து வைத்தார். இதனைத் தொடர்ந்து ரேஸ் கார்கள் மின்னல் வேகத்தில் பாய்ந்தன.
இந்தப் போட்டியில் அஜித் குமாரின் அணி 38ஆவது இடத்தைப் பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சில்வர்ஸ்டோன் சர்க்யூட்டில் அஜித் குமாருடன் கழித்த தருணங்களை விஜய் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். சுமார் 2 நிமிடம் 53 விநாடிகள் கொண்ட அந்தக் காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்று வருகிறது.

காணொளியில், ரேஸ் கார்கள் தொடர்பாக அங்கிருந்த ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் வீரர்களிடம் விஜய் ஆர்வத்துடன் கேட்டறியும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இதனைத் தொடர்ந்து, அஜித் குமாருடன் இணைந்து ரேஸ் கார் மாதிரியை விஜய் ஓட்டிப் பார்த்துள்ளார். மேலும், கார் பந்தய வீரர்கள் அணியும் பாதுகாப்பு உடையை அணிந்துகொண்ட அவர், அதில் ‘Joseph Vijay’ என்ற பெயருடன் அஜித்துடன் இணைந்து ரேஸ் காரில் பயணம் செய்துள்ளார்.
இந்த சந்திப்பின்போது விஜயும் அஜித்தும் கைகுலுக்கி மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டதுடன், கார் மற்றும் மோட்டார் பந்தயம் தொடர்பாக விஜய்க்கு அஜித் விளக்கமளிக்கும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.
மேலும், இருவரும் தேசியக் கொடியை ஏந்தியபடி புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
அஜித்தின் கார் பந்தயத்தை ஆரம்பித்து வைத்தது முதல், அவர் கார் ஓட்டியபோது கையை உயர்த்தி உற்சாகப்படுத்தியது வரை, சில்வர்ஸ்டோனில் விஜய் – அஜித் இணைந்து கழித்த பல உற்சாகமான தருணங்கள் இந்தக் காணொளியில் இடம்பெற்றுள்ளன.
தற்போது இந்த விஜய் – அஜித் சந்திப்பு வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Listen News!