• Sep 18 2026

சவாலான வேடம் என்றால் எதுவாக இருந்தாலும் நடிப்பேன்! – பாக்யஸ்ரீ போர்ஸ்

Aathira / 51 minutes ago

Advertisement

Listen News!

தெலுங்கு திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையாக கவனம் பெற்றுள்ள பாக்யஸ்ரீ போர்ஸ், தமிழில் ‘காந்தா’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானார்.

மராட்டியத்தைச் சேர்ந்த பாக்யஸ்ரீ போர்ஸ் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். நடிகர் சிவகார்த்திகேயனுடன் ‘சேயோன்’ திரைப்படத்திலும் அவர் நடித்து வருகிறார்.

தனது சினிமா பயணம் குறித்து பேசிய பாக்யஸ்ரீ போர்ஸ், பிசினஸ் மேனேஜ்மென்ட் படித்துக்கொண்டிருந்த காலத்திலேயே மாடலிங் துறையில் நுழைந்ததாக தெரிவித்துள்ளார்.

சினிமாவில் நடிக்கலாம் என பலரும் கூறிய நிலையில், வாய்ப்புகள் தேடி வந்தபோது அதனை முயற்சித்துப் பார்க்கலாம் என்ற எண்ணத்தில் திரைத்துறைக்குள் வந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

‘காந்தா’ திரைப்படத்தில் தனது நடிப்பைப் பார்த்த சிலர், ‘மகாநடி’ படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்த சாவித்திரி கதாபாத்திரத்தை நினைவுபடுத்துவதாக கூறியதாகவும் பாக்யஸ்ரீ தெரிவித்துள்ளார்.

இரு திரைப்படங்களும் 1950 மற்றும் 1960களின் காலகட்டத்தை பின்னணியாகக் கொண்டவை என்பதால் இந்த ஒப்பீடு ஏற்பட்டிருக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பீரியட் திரைப்படங்களில் நடிப்பது குறித்து கேள்விகள் எழுப்பப்படுவதாக கூறிய அவர், கதைகளை ஜானர் அடிப்படையில் தேர்வு செய்வதில்லை என்றும், தனக்கு கதைதான் முதன்மையானது என்றும் தெரிவித்துள்ளார்.

ஒரு கதை பிடித்துவிட்டால் அதிலிருந்து விலகுவதில்லை என்றும், குறிப்பிட்ட கதாபாத்திரத்திற்கு தான் பொருத்தமானவர் என்ற நம்பிக்கை இயக்குநருக்கு ஏற்பட்டால், அந்த கதாபாத்திரமாக முழுமையாக மாறி நடிக்கத் தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளைப் புரிந்துகொள்ள முடிந்தாலும், சரளமாக பேசுவதில் இன்னும் சிரமம் இருப்பதாக தெரிவித்துள்ள பாக்யஸ்ரீ, தற்போது இரு மொழிகளையும் கற்று வருவதாக தெரிவித்துள்ளார்.

தென்னிந்திய மொழிகளில் எதிர்காலத்தில் சரளமாக பேச கற்றுக்கொள்வேன் என்ற நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும், கதாநாயகியாக மட்டுமே நடிக்க வேண்டும் என்ற எண்ணம் தன்னிடம் இல்லை என தெரிவித்துள்ள அவர், தனது திறமையை வெளிப்படுத்தக்கூடிய எந்தவொரு சவாலான கதாபாத்திரமாக இருந்தாலும் ஏற்று நடிப்பேன் என கூறியுள்ளார்.

தேவைப்பட்டால் வில்லி கதாபாத்திரங்களிலும் நடிக்கத் தயார் என்றும், தனக்கு சவால் விடுக்கும் வேடங்களையே எதிர்பார்ப்பதாகவும் பாக்யஸ்ரீ போர்ஸ் தெரிவித்துள்ளார்.

தன்னிடம் பிடித்த குணம் தனது பிடிவாதம் என கூறியுள்ள அவர், எடுத்துக்கொண்ட முடிவில் உறுதியாக இருந்து, நினைத்ததை செய்து முடிப்பவள் தான் என்றும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement