மும்பையைச் சேர்ந்த பிரபல இந்தி தொலைக்காட்சி நடிகை அதிதி சர்மா, தனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது அளித்துள்ள புகாரைத் தொடர்ந்து, மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
29 வயதான அதிதி சர்மா, 'கலீரின்', 'யே ஜாது ஹை ஜின் கா', 'ரப் சே ஹை துவா' உள்ளிட்ட பல பிரபல இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே அறிமுகமானவர்.
கடந்த 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், நீண்ட நாட்களாக காதலித்து வந்த நபரை அவர் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு, இருவரும் மும்பையின் கோரேகாவ் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மும்பை கோரேகாவ் காவல் நிலையத்தில் நடிகை அதிதி சர்மா தனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த புகாரில், திருமணமான சில நாட்களிலேயே தனது கணவர் தேவையில்லாமல் தனது ஆடை அணிவது குறித்து குறை கூறத் தொடங்கியதாகவும், சிறிய விஷயங்களைக் கூட பெரிதுபடுத்தி அடிக்கடி தகராறு செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கடந்த ஆண்டு முதல் தனது நடத்தையில் சந்தேகம் கொண்டு, ஆபாசமான வார்த்தைகளால் திட்டியதுடன், பின்னர் தன்னிடம் பேசுவதையே நிறுத்திவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவங்களால் தனக்கு கடுமையான மனஉளைச்சல் ஏற்பட்டதாகவும் புகாரில் கூறியுள்ளார்.
அதுமட்டுமின்றி, தனது கணவரின் பெற்றோர் தன்னுடைய நகைகளை வலுக்கட்டாயமாக எடுத்துக்கொண்டதுடன், தொடர்ந்து மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் துன்புறுத்தியதாகவும் நடிகை குற்றஞ்சாட்டியுள்ளார்.
நடிகை அளித்த புகாரின் அடிப்படையில், அவரது கணவர், மாமனார் மற்றும் மாமியார் மீது பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Listen News!