’மஞ்சும்மெல் பாய்ஸ்’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் ரூ.200 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை செய்தது என்பது தெரிந்தது. இந்த படத்தின் கதை நண்பர்கள் சிலர் கொடைக்கானலில் உள்ள குணா குகைக்கு வந்த போது அவர்களில் ஒருவர் ஆழமான பள்ளத்தில் விழுந்து விடுவதும் அவர்களை நண்பர்கள் எல்லாம் சேர்ந்து எப்படி காப்பாற்றுவது என்பதுதான் கதை.
இந்த நிலையில் தங்களது நண்பரை காப்பாற்ற காவல்துறையிடம் ’மஞ்சும்மெல் பாய்ஸ்’ அணுகியபோது அவர்களை காவல்துறையினர் கொடுமைப்படுத்திய காட்சிகள் இருக்கும் என்பது தெரிந்தது. அந்த வகையில் இது உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது என்பதால் உண்மையான ’மஞ்சும்மெல் பாய்ஸ்’ சமீபத்தில் பேட்டி அளித்தனர் என்பதும் நாங்கள் பட்ட துன்பத்தின் 10 சதவீதம் கூட படத்தில் காட்டப்படவில்லை என்றும் அந்த அளவுக்கு எங்களை காவல்துறையினர் கொடுமைப்படுத்தினார்கள் என்றும் பேட்டி அளித்திருந்தனர்.
ஆனால் அதே நேரத்தில் இந்த சம்பவம் நடந்து 18 ஆண்டுகள் ஆகிவிட்டதால் இந்த விஷயத்தை நாங்கள் மீண்டும் பெரிதுபடுத்த விரும்பவில்லை என்றும் இப்போது புகார் அளித்து அன்றைய தேதியில் பணியில் இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் கோரிக்கையை வைக்க நாங்கள் விரும்பவில்லை என்றும் கூறியுள்ளனர்.
ஆனால் அதே நேரத்தில் சமூக ஆர்வலர் ஒருவர் இது குறித்து தமிழக அரசிடம் புகார் அளித்துள்ளதாகவும், கொடைக்கானலில் 18 ஆண்டுகளுக்கு முன்னர் ரியல் ’மஞ்சும்மெல் பாய்ஸ்’களுக்கு ஏற்பட்ட கொடுமை குறித்து விசாரணைக்கு உத்தரவு எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
இது குறித்த புகார் தற்போது காவல்துறை உயரதிகாரிக்கு சென்றுள்ளதாகவும் அவர் விரைவில் இது குறித்து உத்தரவிடுவார் என்றும் கூறப்படுகிறது. ’மஞ்சும்மெல் பாய்ஸ்’ குழுவினர் புகார் அளிக்க விரும்பவில்லை என்றாலும் இதுபோல் வேறு யாருக்கும் நடக்கக்கூடாது என்பதற்காகத்தான் இந்த புகாரை நான் அளித்து உள்ளேன் என்றும் ’மஞ்சும்மெல் பாய்ஸ்’க்காக அளிக்கவில்லை பொதுவாக அளித்துள்ளேன் என்றும் புகார் அளித்த சமூக ஆர்வலர் தெரிவித்துள்ளார்.
Listen News!