• Jan 15 2026

‘ஜனநாயகன்’ ரிலீஸுக்கு மீண்டும் தடையா.? – உச்ச நீதிமன்ற தீர்ப்பால் ரசிகர்களுக்கு ஏமாற்றம்.!

subiththira / 4 hours ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய் நடிப்பில், இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜனநாயகன்’. அரசியல் மற்றும் சமூக கருத்துகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. இந்த படம், ரசிகர்களிடையே வெளியீட்டுக்கு முன்பே மிகப் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியது. முதலில் இந்த படம் ஜனவரி 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் ஏற்பட்ட சட்ட சிக்கல்களால் படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது.

‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு சென்சார் அதிகாரிகள் சான்றிதழ் வழங்கவில்லை என்பதே ரிலீஸ் தள்ளிப்போனதற்கான முக்கிய காரணமாக அமைந்தது. இதனால், படத்தை வெளியிட முடியாத நிலை ஏற்பட்டதாக தயாரிப்பு நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், படக்குழு நீதிமன்றத்தை நாட முடிவு செய்தது.


படத்தை தயாரித்துள்ள கேவிஎன் (KVN) நிறுவனம், சென்சார் சான்றிதழ் வழங்க மறுத்ததற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆஷா, ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு யு/ஏ (U/A) சான்றிதழ் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.

இந்த தீர்ப்பைத் தொடர்ந்து, படம் தொடர்பான அனைத்து சிக்கல்களும் முடிவுக்கு வந்துவிட்டதாக ரசிகர்கள் நிம்மதி அடைந்தனர். ஆனால், இந்த மகிழ்ச்சி நீண்ட நேரம் நீடிக்கவில்லை. தனி நீதிபதி வழங்கிய உத்தரவை எதிர்த்து சென்சார் தரப்பு மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டை விசாரித்த நீதிமன்றம், நீதிபதி வழங்கிய உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது.

இதன் காரணமாக, மீண்டும் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் வெளியீடு கேள்விக்குறியாக மாறியது. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ரிலீஸ் தேதிகள் அனைத்தும் கைவிடப்பட்டு, படம் எப்போது வெளியாகும் என்ற குழப்பம் ரசிகர்களிடையே உருவானது.

இந்த நிலைமையால் அதிர்ச்சியடைந்த கேவிஎன் நிறுவனம், உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. படம் பொங்கல் பண்டிகைக்கு முன்பாகவோ அல்லது பண்டிகை முடிவதற்குள்ளாகவோ வெளியாகும் என ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்திருந்தனர்.


இந்நிலையில், இன்று உச்ச நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில், நீதிபதி கேவிஎன் நிறுவனத்தின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதன் மூலம், சென்சார் தொடர்பான விவகாரத்தில் தயாரிப்பு நிறுவனத்திற்கு உடனடி தீர்வு கிடைக்காமல் போனது.

மேலும், இந்த வழக்கு தொடர்பான விரிவான விசாரணையை வரும் 20ஆம் தேதி நடத்தப்படும் என்றும் நீதிமன்றம் அறிவித்துள்ளது. இதனால், ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் வெளியீடு மேலும் தள்ளிப்போகும் சூழல் உருவாகியுள்ளது.

இன்று எப்படியாவது தீர்ப்பு வெளியாகி, படம் திரையரங்குகளில் ரிலீஸாகும் என விஜய் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்திருந்தனர். எனினும் அவர்களுக்கு இந்த தீர்ப்பு ஏமாற்றத்தையே அளித்துள்ளது. 

Advertisement

Advertisement