தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான தனுஷ், தனது 54வது திரைப்படத்தில் இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் குறித்த புதிய அப்டேட் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. நீண்ட நாட்களாக ‘D54’ என அழைக்கப்பட்டு வந்த இந்த திரைப்படத்திற்கு அதிகாரபூர்வமாக ‘கர’ என பெயரிடப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
இந்த திரைப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. வித்தியாசமான கதைகளையும் தரமான படைப்புகளையும் தொடர்ந்து வழங்கி வரும் இந்த நிறுவனம், ‘கர’ படத்திற்கும் மிகுந்த பொருட்செலவில், தொழில்நுட்ப ரீதியாகவும் சிறப்பாக தயாரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த திரைப்படம் நடிகர் தனுஷுக்கும் இயக்குநர் விக்னேஷ் ராஜாவுக்கும் முதல் கூட்டணியாக அமைந்துள்ளது. முன்னதாக விக்னேஷ் ராஜா இயக்கிய ‘போர்தொழில்’ திரைப்படம் விமர்சன ரீதியாகவும், ரசிகர்களிடையிலும் நல்ல வரவேற்பை பெற்றது. அந்த வெற்றியைத் தொடர்ந்து அவர் இயக்கும் அடுத்த படமாக ‘கர’ உருவாகி வருகிறது.
இந்த திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மமிதா பைஜு நடித்து வருகிறார். ‘கர’ திரைப்படத்தில் பல அனுபவம் வாய்ந்த மற்றும் திறமைமிக்க நடிகர்கள் இணைந்துள்ளனர். நடிகர் கருணாஸ், இயக்குநரும் நடிகருமான கே.எஸ். ரவிக்குமார், பிருத்வி பாண்டியராஜன், குஷ்மிதா மற்றும் நிதின் சத்யா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பது இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார். ‘கர’ திரைப்படம் இந்த ஆண்டு கோடை காலத்தில் வெளியாகவுள்ளது என படக்குழு அறிவித்துள்ளது.
Listen News!