தமிழ் சினிமாவில் வில்லன் கதாபாத்திரங்களுக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் இருப்பது காலம் கடந்த உண்மை. அந்த வரிசையில், 80கள், 90கள் மற்றும் 2000களில் பல திரைப்படங்களில் வில்லனாக நடித்து தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கியவர் நடிகர் ஆனந்த ராஜ்.
சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், வில்லன்களைப் பற்றியும், குறிப்பாக நடிகர் நம்பியார் குறித்து மிகவும் நெகிழ்ச்சியாக பேசியுள்ளார். அவரது இந்த கருத்து தற்போது சினிமா வட்டாரத்திலும், ரசிகர்கள் மத்திலும் கவனம் பெற்றுள்ளது.

தனது ஆரம்ப கால அனுபவங்களை பகிர்ந்த நடிகர் ஆனந்த ராஜ், “நாம சினிமாவில வில்லனா இருக்கோம். அதனால நிஜத்திலயும் அப்படி நினைச்சிடுவாங்கன்னு நான் பயந்தது இல்ல...அதுக்கு நான் நம்பியார் சாருக்கு தான் நன்றி சொல்லுவேன்." என்று கூறியுள்ளார்.
மேலும், " நம்பியாரை விட சினிமாவில பெரிய வில்லன் இல்லை. ஆனா, நிஜத்தில அவர் நல்லவர் என்பதை மக்கள் கண்டுபிடித்துவிட்டார்கள். அவர் வில்லன் தான்... ஆனா, நிறைய கதாநாயகர்களுக்கு மாலை போட்டு கோவில் கூட்டிக் கொண்டு போயிருக்காரு. " எனவும் தெரிவித்துள்ளார்.
எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன் போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த நம்பியார், தனது வில்லன் கதாபாத்திரங்களால் கதாநாயகர்களையே மிஞ்சும் வகையில் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர். அவரது ஒவ்வொரு வில்லன் வேடமும் கதைக்கு கூடுதல் வலிமை சேர்த்தது. இந்நிலையில், ஆனந்த ராஜ் கூறிய கருத்துகள் தற்பொழுது வைரலாகி வருகின்றது.
Listen News!