நடிகை ராஷ்மிகா மந்தனா, தனது திரைப்பயணத்தில் இதுவரை ஏற்றிராத அளவுக்கு சவாலான ஒரு கதாபாத்திரத்தில் நடித்து வரும் திரைப்படம் ‘மைசா’. இப்படத்திற்காக தனது உடல் மற்றும் நடிப்புத் திறன்களின் எல்லைகளை கடந்து கடுமையாக உழைத்து வருகிறார்.
அறிமுக இயக்குநர் ரவீந்திர புல்லே இயக்கத்தில், அன்ஃபார்முலா ஃபிலிம்ஸ் சார்பில் உருவாகி வரும் இப்படத்தில், ராஷ்மிகா கோண்ட் பழங்குடியின பெண்ணாக நடிக்கிறார். அந்த கதாபாத்திரத்தின் உணர்வுகள், போராட்டம் மற்றும் தீவிரத்தை திரையில் இயல்பாக வெளிப்படுத்துவதற்காக அவர் சிறப்பு பயிற்சிகளுடன் தயாராகி வருகிறார்.
படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது படக்குழு மிக முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி, ‘மைசா’ திரைப்படம் நவம்பர் 27, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகிறது.
ரிலீஸ் தேதியை அறிவிக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ள போஸ்டரில், கையில் மிகப்பெரிய ஈட்டியுடன் ராஷ்மிகா ஆக்ரோஷமாக காட்சியளிக்கிறார். அவரது முகத்தில் போர்க்காயங்கள் காணப்படுவதுடன், பின்னணியில் ஏராளமான மக்கள் கூட்டமும் தீப்பிழம்புகளும் இடம்பெற்றுள்ளன.

பாரம்பரிய உடைகள், பழங்குடியின ஆயுதங்கள், தீக்காட்சிகள் மற்றும் ராஷ்மிகாவின் ஆக்ரோஷமான முகபாவனை ஆகியவை இணைந்து, திரைப்படம் மிகப்பெரிய வரலாற்றுப் பின்னணியைக் கொண்ட ஆக்ஷன் படமாக உருவாகி வருவதை உணர்த்துகின்றன.
மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகி வரும் ‘மைசா’, இந்திய சினிமாவின் ஆக்ஷன் காட்சிகளுக்கு புதிய அளவுகோலை உருவாக்கும் நோக்கில் தயாராகி வருகிறது. பிரம்மாண்டமான செட் அமைப்புகள் மற்றும் அதிரடியான ஸ்டண்ட் காட்சிகளுடன், ரசிகர்களுக்கு பரபரப்பான மற்றும் அட்ரினலின் நிறைந்த திரையரங்கு அனுபவத்தை வழங்கும் வகையில் படம் உருவாக்கப்படுகிறது.
குறிப்பாக, பெண் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்ட ஆக்ஷன் திரைப்படங்களின் எல்லைகளை விரிவுபடுத்துவதுடன், இந்திய சினிமாவின் ஆக்ஷன் காட்சிகளின் தரத்தையும் புதிய உயரத்திற்கு கொண்டு செல்ல படக்குழு திட்டமிட்டுள்ளது.
இதற்கிடையே, படப்பிடிப்பின்போது மிகவும் சவாலான அதிரடி காட்சியில் நடித்தபோது ராஷ்மிகா மந்தனாவுக்கு சமீபத்தில் காயம் ஏற்பட்டது. தற்போது அந்த காயத்திலிருந்து அவர் முழுமையாக குணமடைந்து வருகிறார்.

குணமடைந்ததும் மீண்டும் படப்பிடிப்பில் இணையும் ராஷ்மிகா, படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்ய உள்ளார். தற்போது படப்பிடிப்பில் 12 நாட்கள் மட்டுமே எஞ்சியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறுபுறம், படத்தின் பின்னணி பணிகளும் வேகமாக நடைபெற்று வருகின்றன. பிரம்மாண்டமான காட்சிகளை மேலும் சிறப்பாக உருவாக்கும் வகையில் அதிநவீன VFX பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
அதேபோல், படத்தின் அதிரடி காட்சிகளுக்கும் உணர்வுப்பூர்வமான தருணங்களுக்கும் கூடுதல் வலு சேர்க்கும் வகையில் பின்னணி இசை மற்றும் ஒரிஜினல் ஸ்கோர் உருவாக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
இப்படத்தில் ஈஸ்வரி ராவ், குரு சோமசுந்தரம், ராவ் ரமேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
‘மைசா’ திரைப்படம் தெலுங்கு, இந்தி, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய 5 மொழிகளில் ஒரே நேரத்தில் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.
ராஷ்மிகாவின் மாறுபட்ட தோற்றம், பழங்குடியின பின்னணி, பிரம்மாண்ட ஆக்ஷன் காட்சிகள் என பல அம்சங்களுடன் உருவாகி வரும் ‘மைசா’, வெளியாகும் முன்பே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
Listen News!