சர்ச்சைகளுக்குப் பேசுபொருளாகும் படைப்புகளுக்கு பெயர் பெற்ற இயக்குநர் மோகன் ஜி, தற்போது தனது புதிய படமான ‘திரௌபதி 2’ திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தில் நடிகர் ரிச்சர்ட் ரிஷி கதாநாயகனாக நடித்துள்ளார். சமூக மற்றும் அரசியல் கருத்துக்களை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படம், வெளியீட்டுக்கு முன்பே திரையுலக வட்டாரத்தில் அதிக கவனத்தை பெற்றுள்ளது.

‘திரௌபதி’ படத்தின் தொடர்ச்சியாக உருவாகும் இந்த இரண்டாம் பாகத்திற்கு, படக்குழு 23ஆம் தேதியை ரிலீஸ் தேதியாக குறித்திருந்தது. ஆனால், அதே நாளில் விஜய் நடித்த ‘தெறி’ மற்றும் அஜித் நடித்த ‘மங்காத்தா’ ஆகிய இரண்டு மெகா ஹிட் படங்கள் ரீ ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டது. இதனால், ‘திரௌபதி 2’ படம் பாக்ஸ் ஆபிஸில் பாதிக்கப்படும் என்ற அச்சம் எழுந்தது.
முன்னணி நடிகர்களின் ரசிகர்கள் அதிக அளவில் திரையரங்குகளுக்கு திரும்பும் சூழலில், ரீ ரிலீஸ் படங்கள் கூட புதிய படங்களுக்கு கடும் போட்டியாக மாறி வருகின்றன. இதனை கருத்தில் கொண்டு, தனது படத்திற்கு போதிய திரையரங்குகள் கிடைக்காமல் போகும் என்ற கவலையில், இயக்குநர் மோகன் ஜி, ‘தெறி’ படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணுவை நேரடியாக அணுகி ரீ ரிலீஸை தள்ளி வைக்குமாறு கோரிக்கை வைத்தார்.
இந்த கோரிக்கையை கலைப்புலி தாணுவும் புரிந்து கொண்டு ஏற்றுக் கொண்டார். இதன் மூலம் ‘தெறி’ ரீ ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், மோகன் ஜி சமீபத்தில் ஒரு தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், “தெறி ரீ ரிலீஸை தள்ளி வைக்கக் கேட்டீர்கள், ஆனால் மங்காத்தா ரீ ரிலீஸை தள்ளி வைக்க ஏன் சன் பிக்சர்ஸை அணுகவில்லை?” என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. இந்த கேள்வி சமூக ஊடகங்களில் பரவலாக விவாதிக்கப்பட்டு வந்த நிலையில், மோகன் ஜி அதற்கு விளக்கமளித்துள்ளார்.
அந்த பேட்டியில் மோகன் ஜி,“இந்தக் கேள்வியை என்னிடம் நிறைய பேர் கேட்டிருக்கிறார்கள். 23ஆம் தேதி ரிலீஸ் என்று சன் பிக்சர்ஸ் முன்னரே அறிவித்துவிட்டார்கள். நாங்கள் முதலில் வேறு தேதிகளை யோசித்தோம். பிறகு தான் 23ஆம் தேதிக்கு வந்தோம். அந்த நேரத்தில் தான் தெறி படத்தின் ரீ ரிலீஸ் அறிவிப்பும் வந்தது.” என்றார்.
மேலும் அவர், “கலைப்புலி தாணுவை எளிதாக அணுக முடியும். அதனால் தான் அவரை அணுகி நேரடியாக பேசினோம். அவர் எங்களுடைய நிலையை புரிந்துகொண்டு ரீ ரிலீஸை தள்ளி வைத்தார். அதற்கு அவருக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்."எனவும் தெரிவித்துள்ளார்.
மோகன் ஜியின் இந்த விளக்கம் தற்போது திரையுலகத்திலும் சமூக ஊடகங்களிலும் பரவலாக பேசப்பட்டு வருகிறது. சிலர் அவரது வெளிப்படையான பதிலை வரவேற்றாலும், சிலர் இதை விமர்சித்தும் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். இருப்பினும், தனது படத்தின் நலனை கருத்தில் கொண்டு எடுத்த முடிவாகவே இதை பார்க்க வேண்டும் என பலர் கருத்து தெரிவிக்கின்றனர்.
Listen News!